சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா... விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்

சோழவந்தான் காவல்துறை குடும்பத்தார்கள் சார்பில் தேரோட்ட திருவிழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா, தேரோட்டம்
தேரோட்டம்
Published on

சோழவந்தான்,

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த மாதம் 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினசரி ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி, நான்கு ரத வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் மற்றும் அக்னிச் சட்டி எடுத்தும், கரும்புத் தொட்டில் சுமந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழவான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி கடந்த மாதம் 27-ம் தேதி நடைபெற்றது. விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்

விழாவின் 16-வது நாளான இன்று சோழவந்தான் காவல்துறை குடும்பத்தார்கள் நடத்தும் தேரோட்ட திருவிழா நடைபெற்றது. தேரோட்ட விழாவை முன்னிட்டு அதிகாலை கேடயத்தில் அம்மன் அலங்காரமாகி கோவிலில் இருந்து புறப்பட்டு தேருக்கு வந்து சேர்ந்தார். அர்ச்சகர் சண்முகவேல் பூஜைகள் செய்தார். அதன்பின் தேர் வடம் பிடிக்கப்பட்டது.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த், கருப்பையா எம்எல்ஏ, சமயநல்லூர் துணை கண்காணிப்பாளர் ஆனந்தராஜ், அரசு ஆஸ்பத்திரி தலைமை அதிகாரி தீபா, போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், அழகர்சாமி, சண்முகவேல், தியாகராஜன், பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார், கோவில் செயல் அலுவலர் ராஜா, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் எம்.கே. முருகேசன், பேரூராட்சி தலைவர் ஜெயராமன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வக்கீல் சத்யபிரகாஷ், மின்சார வாரிய உதவி இன்ஜினியர் கீர்த்திகா, தீயணைப்பு நிலைய அலுவலர் நாகராஜ் ஆகியோர் வடம் பிடித்து தேர் திருவிழாவை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் ஏரளாமான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்து வழிபட்டனர்.

காவல்துறை குடும்பத்தார்

தேர் அங்கிருந்து புறப்பட்டு கடை வீதி, தெற்கு ரத வீதி, மேல ரத வீதி,வடக்கு ரத வீதி, வழியாக வலம் வந்து புறப்பட்ட இடத்திற்கு வந்து நின்றது. தேரோட்டத்தின்போது வழி நெடுக பக்தர்கள் மாம்பழம், வாழைப்பழம், நாணயங்கள் சூரை விட்டனர். சிறுவர் சிறுமியர் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி வலம் வந்தனர். ஆங்காங்கே நீர், மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கினர். சோழவந்தான் காவல் துறையை குடும்பத்தார்கள் சார்பாக தேரோட்ட திருவிழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

நாளை மாலை திருவிழா கொடி இறக்கப்பட்டு, அம்மன் வைகை ஆற்றுக்கு சென்று சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. வைகை ஆற்றில் இரவு தொடங்கி விடிய விடிய தீர்த்தவாரி நடைபெறும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com