

சோழவந்தான்,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் அமைந்துள்ள ருக்மணி சத்யபாமா சமேத நவநீதகிருஷ்ணன் திருக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கடந்த 4ம் தேதி முதல் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
4ம் தேதி கிருஷ்ண ஜனனம் நிகழ்ச்சியும், 5-ம் தேதி உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறுதல் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அன்றைய தினம் இரவு சுவாமி நான்கு ரத வீதிகளில் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 6, 7 மற்றும் 8-ம் தேதிகளில் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவிழாவின் 6ம் நாளான நேற்று திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்காக பெண்கள் சீர்வரிசை தட்டுகளுடன் ஊர்வலமாக வந்தனர். அதனைத் தொடர்ந்து பெண் அழைப்பு, மாப்பிள்ளை வீட்டார் அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பாலாஜி பட்டர் மாப்பிள்ளை வீட்டாராகவும் கிருஷ்ண ஹரி பட்டர் பெண் வீட்டாராகவும் இருந்தனர்.
மாலை மாற்றுதல் நிகழ்ச்சியைத் தொடர்ந்து மங்கல இசை முழங்க திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் மங்கலப் பொருட்கள், அன்னதானம் வழங்கப்பட்டது.