

கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மறக்குடி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 10-ந்தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடந்தது. 6-ம் திருநாளான நேற்று சூரசம்ஹாரம் விமரிசையாக நடந்தது.
சூரசம்ஹார நிகழ்வையொட்டி காலையில் யாகசாலை பூஜையும் ஜெயந்தி நாதருக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. மாலை 5.30 மணிக்கு ஜெயந்திநாதர் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேஷ வாகனத்தில் சூரசம்ஹாரத்துக்காக எழுந்தருளி பஞ்ச வாத்தியம், செண்டை மேளம், நாதஸ்வரம் போன்ற மேளதாளங்கள் முழங்க வீதிஉலா வந்து அசுரர்களை வதம் செய்தார்.
முதலில் சூரபத்மனின் தம்பிகளான யானை முகம் கொண்ட தாரகாசுரன் மற்றும் சிங்க முகம் கொண்ட சிங்கமுகாசுரனை வதம் செய்தார் முருகப்பெருமான். பின்னர் மேல ரத வீதி வழியாக வடக்குரத வீதி முத்தாரம்மன் கோவில் முன்பு வந்து சூரனை முருகன் வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" என்று விண்ணதிர பக்தி கோஷம் எழுப்பி தரிசனம் செய்தார்கள்.
சூரசம்ஹாரம் முடிந்த பிறகு காவடி மடத்தில் வைத்து ஜெயந்திநாதருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தட்டு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து மீண்டும் கோவில் சென்றடைந்தார்.
7-ம் திருநாளன இன்று ஜெயந்திநாதருக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இதையொட்டி இன்று காலையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 5.30 மணிக்கு நலுங்கு வைபவம், சீர்வரிசை கொண்டு வருதல், காசி யாத்திரை, மாலை மாற்றுதல், ஊஞ்சல் வைபவம் போன்றவை நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு திருமாங்கல்யதாரணம் மற்றும் மகா தீபாராதணை நடக்கிறது. இரவு 8 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. 8.30 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி மயில்வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.