

திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மகா தீப நெய் காணிக்கை செலுத்த சிறப்பு பிரிவு நேற்று தொடங்கப்பட்டது. இங்கு கட்டணம் செலுத்தி நெய் காணிக்கை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 12-ந் தேதி (வியாழக்கிழமை) துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது. 15-ந் தேதி அதிகாலையில் கோவிலில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறுகிறது. சிகர நிகழ்ச்சியாக 24-ந் தேதி (செவ்வாய்க்கிமை) காலை கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
இதில் மகா தீபம் ஏற்றுவதற்கு 4 ஆயிரத்து 500 கிலோ நெய், 1000 மீட்டர் திரி (காடா துணி) பயன்படுத்துவது வழக்கம். விழாவின்போது இந்த ஆண்டு சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வரக்கூடும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி கோவில் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தீபத் திருவிழாவிற்கான விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மகா தீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக அருணாசலேஸ்வரர் கோவிலில் இணை ஆணையர் அலுவலகம் அருகில் சிறப்பு பிரிவு நேற்று தொடங்கப்பட்டது. இதையொட்டி நேற்று காலை அங்கு கோவில் இணை ஆணையர் பரணிதரன் தலைமையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் அவர் நெய் காணிக்கை செலுத்தும் சிறப்பு பிரிவினை திறந்து வைத்து பக்தர்களிடம் இருந்து நெய் காணிக்கை பெறும் பணியை தொடங்கி வைத்தார். உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் இந்த சிறப்பு பிரிவில் நெய் காணிக்கைக்காக பணம் செலுத்தி வருகின்றனர். பணம் செலுத்தும் பக்தர்களுக்கு அதற்கான ரசீது உடனுக்குடன் வழங்கப்படுகிறது.
ஒரு கிலோ நெய் ரூ.600, அரை கிலோ நெய் ரூ.300, கால் கிலோ நெய் ரூ.150 என்ற அடிப்படையில் நெய் காணிக்கையை செலுத்தலாம் என்று கோவில் அலுவலர்கள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.