

திருப்பதி,
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் மற்றும் அதனுடன் இணைந்த கோவில்களில் இந்த மாதம் (ஆகஸ்டு) முழுவதும் பல்வேறு சிறப்பு விழாக்கள் நடக்கின்றன.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இந்த மாதம் 7, 14, 28 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமைகள்) மாலை 6 மணிக்கு கோவிலின் நான்கு மாடவீதிகளில் திருச்சி உற்சவம் நடக்கிறது. 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு தங்கத்தேரோட்டம், 25-ந்தேதி உத்திராட நட்சத்திரத்தை முன்னிட்டு மாலை 6.45 மணிக்கு கஜ வாகன வீதிஉலா நடக்கிறது.
பலராம கிருஷ்ணர் கோவிலில் வருகிற 8-ந்தேதி ரோகிணி நட்சத்திரத்தை முன்னிட்டு மாலை 6 மணிக்கு திருச்சி உற்சவம், சுந்தரராஜசாமி கோவிலில் நாளை (திங்கட்கிழமை) மற்றும் 30-ந்தேதிகளில் உத்திரட்டாதி நட்சத்திரத்தை முன்னிட்டு மாலை 6 மணிக்கு கோவிலின் நான்கு மாடவீதிகளில் திருச்சி உற்சவம் நடக்கிறது.
சூரியநாராயணசாமி கோவிலில் வருகிற 17-ந்தேதி ஹஸ்த நட்சத்திரத்தை முன்னிட்டு மாலை 5 மணிக்கு திருச்சி உற்சவம் நடைபெறுகிறது. திருச்சானூர் சீனிவாசர் கோவிலில் 8, 15, 22, 29-ந்தேதிகளில் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
திருப்பதியை அடுத்த அப்பலாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் 4-ந்தேதி அஷ்டதள பாத பத்மாராதனை சேவை, 7, 14, 21, 28-ந்தேதி வெள்ளிக்கிழமைகளில் வஸ்திர அலங்கார சேவை மற்றும் அபிஷேகம் நடக்கிறது. 12-ந்தேதி அஷ்டோத்தர சத கலசாபிஷேகம், 26-ந்தேதி ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேஸ்வரருக்கு கல்யாணோற்சவம், 9, 16, 23, 30-ந்தேதிகளில் காலை 8.15 மணிக்கு பிரசன்ன ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடக்கிறது.
பக்தர்கள் இந்த திருவிழாக்களில் பங்கேற்று, தரிசனம் செய்து அருள் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.