

சீர்காழி,
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காரைமேடு ஒளிலாயம் 18 சித்தர்கள் பீடம் அமைந்துள்ளது. மறைந்த ராஜேந்திரா சுவாமிகள் நிர்மாணித்த இந்த ஒளிலாயத்தில் உள்ளூர் மட்டுமின்றி வெளிநாட்டினரும் வந்து வழிபாடு நடத்தி செல்வது வழக்கம்.
இந்நிலையில் உலக நன்மை வேண்டியும், வெயிலின் தாக்கம் குறைய வேண்டியும் ஒளிலாயம் 18 சித்தர்கள் பீடத்தில் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றது. 30 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 108 மூலிகைகள் கொண்டும் 30 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், ருத்ர ஹோமம் உள்ளிட்ட பூஜைகளுடன் மகா யாகம் நடைபெற்றது.
யாகத்தைத் தொடர்ந்து ஒளிலாயத்தில் அருள்பாலிக்கும் சிவலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு யாகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். முன்னதாக யாகத்தில் பங்கேற்ற கிராம மக்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டன.