

சென்னைக்கு அருகில் உள்ள ஞாயிறு கிராமத்தில் அமைந்துள்ளது புஷ்பரதேஸ்வரர் கோவில். இந்த கோவிலுக்கு அருகில் சீதா சமேத சொர்ண கல்யாணராமர் கோவில் உள்ளது. புஷ்பரதேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள், சிவபெருமானை வழிபட்ட பிறகு, சொர்ண கல்யாண ராமரையும் தரிசனம் செய்வது வழக்கம்.
இக்கோவிலின் மூலவர் 'ஸ்ரீ சொர்ண கல்யாண ராமர்' ஆவார். இவர் கருவறையில் சீதா தேவி மற்றும் லட்சுமணருடன் அருள்பாலிக்கிறார். இந்த ராமபிரான் நான்கு திருக்கரங்களுடன் விளங்குவது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். மேலும், மற்ற கோவில்களைப் போல் அல்லாமல் இங்கு ராமபிரான் தனது கரங்களில் சங்கு சக்கரத்தை மாற்றி வைத்துள்ளார். அதாவது, வலது கையில் சங்குடனும், இடது கையில் சக்கரத்துடனும் காட்சியளிக்கிறார். சீதா தேவி ஸ்ரீ ராமரின் மடியில் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார்.
இப்பகுதி மக்கள் இந்த ஆலயத்தின் மூலவரை 'பத்ராசல ராமர்' என்றும் அழைக்கின்றனர். பத்ராசலத்தில் ஸ்ரீ ராமர் வெண்குடையுடன் காட்சியளிப்பார், ஆனால் இங்கு அத்தகைய வெண்குடை இல்லை.
உற்சவர் ராமர் தனது தலையை ஒரு பக்கமாக சாய்த்த நிலையில் இருப்பதால், இவர் 'செவி சாய்த்த ராமர்' என்று அழைக்கப்படுகிறார். அதாவது, பக்தர்களின் குறைகளையும் பிரார்த்தனைகளையும் செவிமடுத்து கேட்பது மட்டுமின்றி, அந்த பிரார்த்தனைகளை நிறைவேற்றியும் வைப்பதாக நம்பிக்கை.
அப்பகுதியில் ஒரு பள்ளியின் கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டியபோது, ஸ்ரீ சக்கரத்தாழ்வார் மற்றும் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஆகியோரின் சிலைகள் பூமியிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. எனவே, அந்த இடத்தில் கோவில் எழுப்பி, அந்த சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
முழுவதும் பச்சை நிற மரகத கல்லால் சக்கரத்தாழ்வார் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சக்கரத்தாழ்வார் சிலையின் ஒரு பக்கத்தில் சுதர்சனரும், பின்பக்கத்தில் யோக நரசிம்மரும் வீற்றுள்ளனர். சில ஆண்டுகளுக்குப் பிறகு, ஆந்திராவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஸ்ரீ ஆஞ்சநேயர் சிலை ஒன்றும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதுதவிர நாக தேவதைகளுக்கு தனிச் சன்னதி ஒன்றும் இங்குள்ளது. லட்சுமி நாராயண பெருமாளுக்கு தனி சன்னதி உள்ளது. கோவிலின் பின்புறம் தகரக் கூரையிடப்பட்ட பகுதி ஒன்று உள்ளது. அங்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அன்னதானம் நடைபெறுகிறது.
சீதா சமேத சொர்ண கல்யாணராமருக்கு அடிக்கடி அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடத்தப்படும். இந்த அபிஷேகத்துக்கான பொருட்களை பக்தர்கள் வழங்கலாம். அவரவர் வேண்டுதலின்படி அபிஷேக பொருட்களை வழங்குகிறார்கள்.
மாதத்தின் இரண்டாவது மற்றும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் 'சுதர்சன ஹோமம்' நடத்தப்படுகிறது. காலை 9 மணி முதல் 12 மணி வரை இந்த சுதர்சன ஹோமம் நடைபெறும். பக்தர்களுக்காக 'மட்டைத் தேங்காய்' (நார் நீக்கப்படாத தேங்காய்) கொண்டு சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன. பக்தர்களும் இந்த ஹோமத்தில் பங்கேற்கலாம். வசதி உள்ளவர்கள் சுதர்சன ஹோமத்திற்கு நெய், பால், தயிர், தேன் போன்றவற்றை வாங்கிக் கொடுக்கலாம். சுதர்சன ஹோமம் செய்தாலோ அல்லது பங்கேற்றாலோ ராகு-கேது தோஷம் விலகும் என்பது ஐதீகம்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும், திருமணம் ஆகாத பக்தர்களும் இக்கோவிலுக்கு வந்து வேண்டிக்கொண்டால் அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இத்தலத்து ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.
சென்னை செங்குன்றத்தில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் இருக்கிறது இக்கோவில்.