

ஸ்ரீகாளஹஸ்தி,
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் 'கூஷ்மாண்ட' அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நவராத்திரி உற்சவம் கோலாகலமாக நடந்து வருகிறது. சிவன் கோவில் உள்பட துணை கோவில்களில் அழகாக மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் ஸ்ரீகாளஹஸ்தி நகரம் முழுவதும் மின்விளக்குகளாலும், தோரணங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் உள்ள மூலவர் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சன்னதி எதிரே கொலு அமைக்கப்பட்டுள்ளது. கொலுவில் உள்ள சிலை அலங்காரம் பக்தர்களை கவரும் வகையில் உள்ளன. தினமும் மாலை நேரத்தில் மூலவர், உற்சவர் அம்மன்கள் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.
அதன்படி நவராத்திரி உற்சவத்தின் 4-வது நாளான நேற்று உற்சவர் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் 'கூஷ்மாண்ட' அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் சிவன் கோவிலில் வீற்றிருக்கும் கனக துர்க்கையம்மனுக்கு 'மீனாட்சி தேவி' அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதேபோல் ஸ்ரீகாளஹஸ்தி முத்தியாலம்மன் கோவிலில் உற்சவர் அம்மன் 'கூஷ்மாண்ட' அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அத்துடன் ஏழு கங்கையம்மன் கோவிலில் வீற்றிருக்கும் உற்சவர் கங்கையம்மனுக்கு 'கூஷ்மாண்ட' அலங்காரம் செய்யப்பட்டிருந்ததை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.