

ஸ்ரீரங்கம்,
ஸ்ரீரங்கத்தில் சீரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருந்த கிழக்கு கோபுரம் 3 ஆண்டுகளுக்கு பிறகு பயன்பாட்டிற்கு வந்தது.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்கள் உள்ளன. இதில் கோவிலின் கிழக்கு நுழைவுவாயிலில் உள்ள தாமோதர கிருஷ்ணன் கோவில் கோபுரத்தின் ஒரு பகுதி (கொடுங்கை எனப்படும் வளைவுப் பகுதி) கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி நள்ளிரவில் திடீரென இடிந்து விழுந்தது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் கிழக்குவாசல் கோபுரத்தை சீரமைக்க கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து கோவையை சேர்ந்த ஜெயபால் என்பவர் இந்த கோபுரத்தை ரூ.2 கோடி மதிப்பில் புனரமைக்க முன்வந்தார். அதன்படி பழமை மாறாமல் புனரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்றன. இதனால் கோபுர வாயில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது.
சீரமைப்பு பணிகள் சமீபத்தில் முழுமையாக நிறைவடைந்தன. கோபுரத்தில் சிதிலமடைந்த முதல் நான்கு நிலைகள் புனரமைக்கப்பட்டன. இதையடுத்து இந்த கோபுர வாயில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நேற்று திறந்து விடப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கோபுர வாயிலை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் பிரத்திக் தாயள், கூடுதல் இணை ஆணையர் பொன்மணி, கோவில் ஆணையர் சிவராமன் மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.