

திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.
இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும், கோடை விடுமுறை என்பதாலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் ராஜகோபுரம் வழியாகவும், அம்மணி அம்மன் கோபுரம் அருகில் அமைக்கப்பட்டு உள்ள காத்திருப்பு கூடத்தின் வழியாகவும் தரிசனத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
பக்தர்களின் வரிசையானது அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயிலுக்கு அருகில் உள்ள காத்திருப்பு கூடத்தில் உள்ள 8 அறைகளையும் தாண்டி வட ஒத்தவாடை தெருவில் நீண்டு காணப்பட்டது. அதேபோல் ராஜகோபுரம் வழியாக சென்ற பக்தர்களின் வரிசையில் வட ஒத்தவாடை தெரு வழியாக, தேரடி தெரு வரையில் நீண்டு காணப்பட்டது.
இன்று வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. எனினும் வெயிலை பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். வரிசையில் நின்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் நீர், மோர் வழங்கப்பட்டது. கோவிலில் பொது தரிசன வழியில் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 4 மணி நேரத்திற்கு மேலானதாக தெரிவித்தனர். மேலும் நேற்று இரவு முதல் இன்று காலை வரையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பகலில் வெயிலின் தாக்கத்தினால் கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது.