

ஈசனுக்கே தோஷம் போக்கிய தலம் தஞ்சை அருகே உள்ளது. இத்தல பெருமாளை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
ஈசனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்ற ஐந்து திருமுகங்கள் உண்டு. இதேபோல் பிரம்மதேவனுக்கும் 5 திருமுகங்கள் உண்டு. இவ்வாறு தனக்கு ஐந்து திருமுகங்கள் இருப்பதால், ஒருசமயம் ஈசனுக்கு ஈடாக தன்னையும் நினைத்துக் கொண்டு மிகுந்த கர்வத்துடன் செயல்பட்டார் பிரம்மதேவன். இவரது ஆணவத்தை அடக்க வேண்டும் என்று எண்ணிய ஈசன், பிரம்மதேவனின் ஐந்து தலைகளில் நடுத்தலையை கிள்ளி எறிந்தார். அன்று முதல் பிரம்மதேவன் நான்முகன் ஆனார்.
ஆனால் பிரம்மதேவனின் தலையை கிள்ளி எறிந்ததால் ஈசனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. மேலும் கிள்ளி எறியப்பட்ட பிரம்ம கபாலமும் ஈசனின் கையில் ஒட்டிக் கொண்டது. பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்குவதற்காக சிவபெருமான், ஒவ்வொரு திருத்தலங்களுக்கு சென்று தரிசனம் செய்தார். ஒரு திருத்தலத்திற்கு சென்றபோது அவரது கையில் ஒட்டியிருந்த பிரம்ம கபாலம் விழுந்து, அவரது தோஷமும் நீங்கியது. அந்த இடத்தில் மகா விஷ்ணு இருந்தார்.
அந்த திருத்தலம் தஞ்சாவூர் திருக்கண்டியூரில் உள்ள பூரணவல்லி தாயார் சமேத ஹரசாப விமோசனப் பெருமாள் கோவில் ஆகும். ஈசனுக்கே தோஷம் போக்கிய தலமாதலால், இத்தல பெருமாளை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். வேண்டுதல் நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
அமாவாசை தினத்தன்று பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்வித்து, தயிர்சாதம் நைவேத்தியம் செய்து வழிபடுவது சிறப்பு. பின்னர், ஏழை - எளியவர்களுக்குத் தங்களால் இயன்ற அளவு ஆடை தானம் செய்யவேண்டும். இதனால் சகல தோஷங்களும் நீங்கி, வாழ்க்கை வளம் பெறும் என்பது ஐதிகம். இங்கு, புரட்டாசி உற்சவம் வெகுவிசேஷம். புரட்டாசி மாதம், திருவோணம் நட்சத்திரத்தன்று கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த உற்சவத்தில் தினமும் சுவாமி வீதியுலா, விசேஷ அபிஷேக- ஆராதனைகள் நடைபெறும். விழாவின் கடைசி நாளன்று, குடமுருட்டி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறும்.