திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

வருகிற 24-ந்தேதி காலையில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தேரோட்டம் நடைபெற உள்ளது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Published on: 

மதுரை,

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் கார்த்திகை தீபத்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

16 வகை அபிஷேகங்கள்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழாவும் ஒன்றாகும். நடப்பாண்டுக்கான விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி அதிகாலையில் உற்சவர் சன்னிதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து மேளதாளங்கள் முழங்க சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுடன் தங்க மயில் வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார்.

கொடியேற்றம்

கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் கம்பத்தடியில் உள்ள கொடிமரத்திற்கு புனிதநீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தர்ப்பைப்புல், மாவிலை, சந்தனம், குங்குமம் ஆகியவற்றால் கொடிமரம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டது.

தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க, மேளதாளங்கள் இசைக்க இன்று காலை 7.14 மணிக்கு தங்கமுலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.

தினமும் வாகனங்களில் வீதி உலா

திருவிழா நாட்களில் தினமும் காலையில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்கச் சப்பரத்திலும், மாலையில் தங்க மயில் வாகனம், வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

24-ந்தேதி மகா தீபம்

கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 23-ந்தேதி (திங்கட்கிழமை) பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலையில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தேரோட்டம் நடைபெற உள்ளது. மாலையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும். இதைத்தொடர்ந்து 16 கால் மண்டபம் பகுதியில் சொக்கப்பனை தீபக்காட்சியும் நடைபெற உள்ளது.

கந்தசஷ்டி விழா நிறைவு நாள்

இதற்கிடையே, திருப்பரங்குன்றம் கோவிலில் இன்று கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. நிறைவு நாளையொட்டி நடைபெறும் கந்தசஷ்டி தேரோட்டத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, ரத வீதி மற்றும் கிரிவீதிகளில் சிறிய சட்டத் தேரோட்டம் நடைபெறுகிறது.

வழக்கமாக கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்தின்போது சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சிம்மாசனத்தில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளுவது வழக்கம். ஆனால், இன்று கந்தசஷ்டி விழா தேரோட்டமும் நடைபெறுவதால் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் வ.சண்முகசுந்தரம் தலைமையில், கோவில் துணை ஆணையர் செல்வி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

X