

நவம்பர் 27-ந்தேதி முதல் டிசம்பர் 7-ந்தேதி வரை கபிலேஸ்வரருக்கு ருத்ரஹோமம் நடைபெறும்.
திருப்பதி.
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் தெலுங்கு கார்த்திகை மாதத்தில் திருப்பதி தேவஸ்தானத்தால் ஏற்பாடு செய்யப்படும் ஒரு மாத சிறப்புப் பூஜைகள், ஹோம மகோற்சவம் நேற்று முன்தினம் மாலை கோலாகலமாகத் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ஹோம மகோற்சவம் அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந்தேதி வரை நடக்கிறது.
இந்த உற்சவத்தின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை கணபதி பூஜை, புண்ணியாகவாசனம், வாஸ்து பூஜை, பர்யானிக்கரணம், மிருத்சங்கரணம் மற்றும் முளைப்பாரி சமர்ப்பிக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பின்னர் கலச ஸ்தாபனம், அக்னி பிரதிஷ்டை, லகு பூர்ணாஹுதி நடந்தன.
நேற்று காலையில் பஞ்சமூர்த்திகளுக்குச் சிறப்பு ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெற்றது. மாலையில் பல்வேறு சடங்குகளுடன், கணபதி ஹோமம் மற்றும் லகு பூர்ணாஹுதி நடைபெற்றன.
இந்நிகழ்ச்சிகளில் திருமலை திருப்பதி தேவஸ்தான இணை செயல் அலுவலர் ஏ.சரத், துணைச் செயல் அலுவலர் நாகரத்னா, உதவி செயல் அலுவலர் குமாரிதேவி, கண்காணிப்பாளர் சந்திரசேகர் மற்றும் பிற அதிகாரிகள், கோவில் அர்ச்சகர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) சுப்பிரமணிய சுவாமி ஹோமம், 14-ந்தேதி தர்ம சாஸ்திர ஹோமம், 15-ந்தேதி நவக்கிரக ஹோமம் ஆகியவை நடக்கின்றன. 16-ந்தேதி தட்சிணாமூர்த்தி ஹோமம், 17-ந்தேதி கால பைரவர் ஹோமம் மற்றும் 18 முதல் 26-ந்தேதி வரை காமாட்சி அம்பாள், சண்டி ஹோமம் நடக்கிறது.
27-ந்தேதி முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 7-ந்தேதி வரை கபிலேஸ்வரருக்கு ருத்ரஹோமமும், டிசம்பர் 8-ந்தேதி சண்டிகேஸ்வரர் ஹோமமும் நடக்கிறது. நிறைவு நாளில் திரிசூல ஸ்நானம் மற்றும் பஞ்ச மூர்த்திகள் திருவீதி உற்சவம் கோலாகலமாக நடக்கிறது.
இந்த ஹோம மகோற்சவத்தின் ஒரு பகுதியாக வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவம் 15-ந்தேதி அன்றும், மாத சிவராத்திரியை முன்னிட்டு சிவன்-பார்வதி தாயார் திருக்கல்யாண உற்சவம் டிசம்பர் 7-ந்தேதி அன்றும் நடக்கிறது.
பக்தர்கள் ஒவ்வொரு ஹோமத்திலும் அல்லது திருக்கல்யாண உற்சவத்திலும் பங்கேற்க தலா ரூ.500 கட்டணம் செலுத்தவேண்டும். ஒரு டிக்கெட்டில் இருவர் பங்கேற்கலாம். ஹோமத்தில் பங்கேற்பவர்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து வருவது கட்டாயமாகும்.
திருப்பதி தேவஸ்தானம் 2012-ம் ஆண்டு முதல் கபிலேஸ்வரர் கோவிலில் இந்த ஹோம மகோற்சவங்களை நடத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களிடம் இருந்து பெரும் வரவேற்பை பெறுவதோடு, ஹோமங்களில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்த ஹோமங்களை தனித்தனியாக நடத்துவது செலவு மிக்கதாக இருப்பதால், சாதாரண பக்தர்களுக்கும் ஹோமத்தின் பலன்களை பெறும் வாய்ப்பை வழங்கும் நோக்கில் தேவஸ்தானம் இவற்றை கூட்டாக நடத்தி வருகிறது. அதில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்யலாம்.