திருப்பதி, திருமலையில் பவுர்ணமி கருடசேவை... திரளான பக்தர்கள் தரிசனம்

அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருமலையில் கருட சேவை, கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி
கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி
Published on: 

திருப்பதி,

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவில் மற்றும் திருமலை ஏழுமலையான் கோவில் ஐப்பசி மாத பவுர்ணமி கருடசேவை நடந்தது. இந்நிகழ்வுகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று தங்கக் கருட வாகன வீதிஉலா (கருட சேவை) நடப்பது வழக்கம். அந்த வகையில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி நேற்று இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை கருட சேவை கோலாகலமாக நடந்தது. அதில் சர்வ அலங்காரத்தில் உற்சவர் மலையப்ப சுவாமி எழுந்தருளி, கோவிலின் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்நிகழ்வில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மாநில அமைச்சர் அனகனி சத்ய பிரசாத், திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி முத்தாடா. ரவிச்சந்திரா மற்றும் வாரிய உறுப்பினர்கள், கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சவுத்ரி, தலைமை விஜிலன்ஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரி முரளிகிருஷ்ணா மற்றும் பலர் கலந்து கொண்டு பகவானை தரிசனம் செய்தனர்.

திருப்பதி பவுர்ணமி கருட சேவை, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
கருட சேவை நிகழ்ச்சியில் பங்கேற்று தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்

கோவிந்தராஜ சுவாமி

அதேபோல் திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் பவுர்ணமியையொட்டி நேற்று கருட சேவை வெகு விமரிசையாக நடந்தது. பல்வேறு மலர்களாலும் ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கோவிந்தராஜ சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வாகன வீதிஉலாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் கருட சேவை
கருட வாகனத்தில் எழுந்தருளிய திருப்பதி கோவிந்தராஜ சுவாமி

கருட சேவையின் மகத்துவம்

108 வைணவ திவ்ய தேசங்களிலும் கருட சேவை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கருட வாகனத்தில் எழுந்தருளும் பெருமாள், அடியார்களுக்கு அடியனாக திகழும் தமது பணிவை உணர்த்துகிறார்.

மேலும் ஞானம் மற்றும் வைராக்கியத்தை விரும்புவோர், அவற்றின் அடையாளமாக விளங்கும் சிறகுகளுடன் பறக்கும் கருடனை தரிசிப்பதன் மூலம் தங்கள் பாவங்கள் நீங்கும் என்பதை உணர்த்துகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com