

திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இரவு கருடசேவை நடைபெறும். தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் மலையப்ப சுவாமி எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
அவ்வகையில் ஆனி மாத பெளர்ணமியையொட்டி நேற்று இரவு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்கக் கருட வாகன வீதிஉலா நடந்தது. பலவண்ண மலர்களாலும், நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட தங்க ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் மலையப்ப சுவாமி, தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கருட சேவையின்போது மாட வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் ‘கோவிந்தா.. கோவிந்தா..’ என பக்தி முழக்கம் எழுப்பியபடி பகவானை தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சவுத்ரி, தேவஸ்தான நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சாந்தாராம், பனபாக லட்சுமி, ஜானகி தேவி, விஜிலன்ஸ் அதிகாரி சுரேந்திரா, தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி லோகநாதம், கோவில் பேஷ்கார் ராமகிருஷ்ணா மற்றும் பிற அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.
கருட வாகனம் என்பது பகவானிடம் முழுமையான சரணடைதலை (சரணாகதி) குறிக்கும் ஆன்மீக சின்னமாகும். 108 திவ்ய தேசங்களில் மிக உயர்வான தரிசனம் 'கருட சேவை' ஆகும். கருட சேவை அன்று பெருமாளிடம் பக்தர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் அல்லது வேண்டுதல்களை பெருமாளை சுமந்து செல்லும்போது கருடன், பெருமாளிடம் கூறுவார் என்பது நம்பிக்கை. எனவே, பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா வரும்போது தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
கருட வாகனம் பெரிய திருவடி என அழைக்கப்படுகிறது. மகா விஷ்ணுவின் வாகனமான கருடன், ஞானம் மற்றும் பற்றின்மையின் அடையாளமாகத் திகழ்கிறார். அவர் பகவானிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்து, அவரது திருவடிகளைத் தன் இரு கரங்களால் ஏந்தியிருப்பார். எனவே, கருட வாகனத்தில் எழுந்தருளியிருக்கும் பகவானைத் தரிசிப்பது பாவங்களைப் போக்கி, ஆன்மீக ஞானத்தையும் தெய்வீக அருளையும் வழங்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.