மகா சாஸ்தாவின் அருளை எளிதில் பெற உதவும் ‘புத வார விரதம்’

புத வார விரதத்தை கடைப்பிடிப்பவர்களின் வம்சத்தில் அக்ஞானம், வியாதி போன்ற துன்பங்கள் அணுகாது என்பது நம்பிக்கை.
மகா சாஸ்தாவின் அருளை எளிதில் பெற உதவும் ‘புதவார விரதம்’
புதவார விரத மகிமை
Published on

பகவான் மகா சாஸ்தாவிற்கு உரிய விரதங்கள் புத வார விரதம் (புதன்கிழமை), சனி வார விரதம் (சனிக்கிழமை), உத்திர நட்சத்திர விரதம் ஆகும். ஏதேனும் ஒரு புதன்கிழமையன்றோ, சனிக்கிழமையன்றோ அல்லது ஒவ்வொரு மாதத்திலும் வரும் உத்திர நட்சத்திரத்தன்றோ விரதம் மேற்கொண்டு சாஸ்தாவை வழிபடலாம். ஒவ்வொரு விரதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு.

மகா சாஸ்தாவிற்குரிய புதவார விரத மகிமை குறித்து வியாசரின் சிடரான சூதமாமுனிவர், சௌனகாதி முனிவர்களுக்கு கூறியதாக, ஸ்ரீகாடந்தேத்தி மகா சாஸ்தா புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:-

புத வார விரத மகிமை
துயரத்தில் இருக்கும் மன்னன்

ஒரு சமயம் தென்பாரத தேசத்தை மதுரையம்பதியை தலைநகராகக் கொண்டு அபராஜிதன் என்ற மன்னன் சிறப்புடன் அரசாட்சி செய்து வந்தான். தர்மநெறியில் மிகுந்த பற்று உடையவனான மன்னனுக்கு குழந்தை பாக்கியம் இல்லாத பெருங்குறை வாட்டி வதைத்தது. பின்னர் அரசவை அறிஞர்களின் அறிவுரைப்படி, பகவான் மகா சாஸ்தாவை கடும் சிரத்தையுடன் ஆராதித்தார். இதனால் மன்னனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குமாரனோ, முற்பிறவி பாவங்களை பிரதிபலிப்பது போல் பெரும் மூடனாய் வளர்ந்து வாலிப பருவத்தை அடைந்தான். அதனால் அம்மன்னன் தாங்க முடியாத துன்பம் அடைந்தான்.

அந்த மன்னனுக்கு சந்திரகுப்தன் என்ற நண்பன் இருந்தான். வைஸ்யனான சந்திரகுப்தன், பிற தேசங்களுக்கு சென்று வணிகம் செய்து வந்தான். இவ்வாறு ஒரு சமயம் பிற தேசங்களுக்கு சென்று வணிகம் செய்துவிட்டு, ஈட்டிய பொருட்களுடன் நாடு திரும்பிக்கொண்டிருந்தான். அவருடன் வேறு சில வணிகர்களும் வந்துகொண்டிருந்தனர். வழியில் அவர்கள் ஒரு அடர்ந்த கானகத்தை கடக்கும்போது, அவர்களை நோக்கி புலி ஒன்று பாய்ந்து வந்தது. இதனால் அந்த வணிகர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். தனது பொருட்களுடன் வெகுதூரம் ஓடிய சந்திரகுப்தன், தழைகளால் மூடப்பட்டிருந்த பெரிய குழியில் விழுந்தான். இதனால் அவன் கால் எலும்பு முறிந்தது. அவனால் பள்ளத்தில் இருந்து வெளியேற முடியவில்லை.

அவனை வேடுவ குல தலைவர் வஜ்ரஹஸ்தன் காப்பாற்றி தனது வீட்டிற்கு அழைத்து வந்து, வைத்தியர்களை வரவைத்து சிகிச்சை அளித்தான். ஒரு பட்ச காலம் காலூன்றி நடக்கக்கூடாது என வைத்தியர்கள் கூறியிருப்பதால், தனது வீட்டிலேயே சந்திரகுப்தனை விருந்தாளியாக தங்க வைக்கிறார். ஒரு வாரம் கழிந்த நிலையில் அந்த பகுதி வழியாக தேவஹோத்ரர் என்ற முனிவர் வந்தார். அவர் மகா சாஸ்தாவை எப்பொழுதும் தியானித்து ஆராதிக்கும் பக்தர். அவரைக் கண்டதும் வேடுவ குல தலைவர், தம் மனைவியுடன் எதிர்கொண்டு முனிவரை வரவேற்று தங்கள் வீட்டிற்கு வந்து தங்கி, உபசரிப்புகளை ஏற்று ஆசி வழங்கும்படி கேட்டுக்கொண்டார். முனிவரும் அவரது அழைப்பை ஏற்று வீட்டிற்கு சென்றார்.

அந்த வேடுவ குல தலைவனின் மகன் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு பேசும் திறனை இழந்துவிட்டான். அவன் வாயிலிருந்து எப்போதும் கோழை வழிந்துகொண்டே இருக்கும். தன் குல வைத்தியர்களை கொண்டு பல விதங்களிலும் சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. வேடுவ தலைவரின் மகனது நிலையை கண்ட முனிவர், நோய் குறித்து விசாரித்து அறிந்தார். பின்னர் அந்த சிறுவனின் நோயை குணப்படுத்த முன்வந்த முனிவர், தனது விரத பலனை வழங்கி குணப்படுத்துவதாக கூறுகிறார்.

புத வார விரத பலன்கள்
வேடுவ குல தலைவரிடம் புத வார விரதம் குறித்து விளக்கும் முனிவர்

புத வார விரத பலன்

“பகவான் மகா சாஸ்தாவின் அருளை எளிதில் பெற்றுத் தரும் பெருமை வாய்ந்தது புதவார விரதம். இவ்விரதம் பகவான் மகா சாஸ்தாவிற்கு மிகவும் களிப்பூட்டுவது. துன்பத்தில் துவண்டுழலும் ஜீவர்களின் வாழ்வினை மேம்படுத்து இன்பம் தரவல்லது. இந்த விரதத்தை பக்தி சிரத்தையுடன் அனுசரிப்பவர்கள் உயரிய வித்யாஞானத்தையும், சகல காரிய சித்தியினையும், நல்லொழுக்க சிந்தனைகளையும் பெற்று வாழ்ந்து இறுதியில் சாயுஜ்ய முக்தியுனையும் பெறுவார்கள். அந்த விரதத்தை கடைப்பிடிப்பவர்களின் வம்சத்தில் அக்ஞானம், வியாதி போன்ற துன்பங்கள் அணுகாது.

அத்தகைய உயர்ந்த விரதத்தை நெடுங்காலமாக அனுசரிப்பவன் நான். அந்த விரத பலனில், ஒரு வருட கால பலனை உன் மகனுக்கு நான் தத்தம் செய்கிறேன். அப்பலனால் உன் துயரம் ஒழியும். அதன்பின் நீயும், உன் குடும்பத்தினரும் அந்த விரதத்தை முறைப்படி அனுஷ்டித்து மேன்மை அடையுங்கள்’ என்று கூறிவிட்டு அந்த உன்னதமான விரதத்தை கடைப்பிடிக்கும் முறைகளையும் விவரித்தார். அதனை அங்கிருந்த யாவரும் பத்தி சிரத்தையுடன் கேட்டுக்கொண்டனர்.

புத வார விரதத்தின் மகிமை

அதன்பின் முனிவர் தனது புதவார பலனில் ஒருவருட கால பலனை முறைப்படி அவ்வேடுவ தலைவரின் மகனுக்கு தத்தம் செய்து கொடுத்தார். உடன் அவ்விரத மகிமையால் அந்த சிறுவன் குணமடைந்தான்.

இதை கவனித்துக்கொண்டிருந்த சந்திரகுப்தன், முன்வரின் பாதங்களில் நமஸ்கரித்து தனது உடல்நல குறைபாட்டையும் போக்கும்படி வேண்டினார். முன்வரும் அவனது விருப்பத்தை பூர்த்தி செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

அவரால் உடல்நலம் தேறிய சந்திரகுப்தன், நாடு திரும்பியதும் நேராக தனது நண்பனான மன்னனை சந்தித்து நடந்த சம்பவத்தை கூறினார். அத்துடன் சக்திவாய்ந்த புதவார விரதத்தின் மகிமையையும் விளக்கினார்.

“புதவார விரதத்தை ஒரு வருட காலம் சிரத்தையுடன் கடைப்பிடித்தால் அதன் பலனாய் பகவான் மகா சாஸ்தாவின் பேரருள் உங்கள் குடும்பத்திற்கு கிட்டி, உங்களது மகனும் அக்ஞான பீடைகளில் இருந்து விடுபட்டு நல்லதொரு அறிஞனாய் மாறி விடுவான்” என்று கூறிய சந்திரகுப்தன், முனிவர் கூறியபடி அந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டிய முறைகளையும் எடுத்துரைத்தார்.

ஞானம் வழங்கும் புத வார விரதம்

அதனைக்கேட்டு பெரும் சந்தோஷம் அடைந்த மன்னரும், பல பாக்யங்களை அள்ளித் தரும் அந்த உன்னத விரதத்தை ஒரு வருட காலம் வெகுநியமத்துடன் கடைப்பிடித்து, தனது மூடமகன் பெரும் அறிஞனாக மாறும்படி செய்தான்.

இந்த வரலாற்றினை கூறிய சூதமாமுனிவர், “திவ்ய ஞானத்தையும் வித்தையினையும் பெற விழைபவர் அவசியம் புத வார விரதத்தை மேற்கொள்ளவேண்டும். இந்த விரதத்தை மேற்கொண்ட வியாச மகரிஷி, பதினெட்டு புராணங்களையும் மகாபாரத இதிகாசத்தையும் படைக்கும் ஆற்றல் பெற்றார். சுகர் (சுகப்பிரம்ம முனிவர்) ஸ்ரீமத்பாகவதத்தை பரிட்சித்து மகாராஜாவுக்கு கூறும் சாமர்த்தியம் பெற்றார்” என்று கூறியருளினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com