ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தர்... பாடலீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற தெய்வீக நிகழ்ச்சி

திருஞானசம்பந்தர் குழந்தைப்பருவத்தில் பசியால் அழுதபோது அம்பாள் நேரில் தோன்றி ஞானப்பால் புகட்டியதாக ஐதீகம்.
கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி திருவிழா, ஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்ச்சி
திருஞான சம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்ச்சி
Published on

கடலூர்,

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் 13 நாட்கள் வைகாசி பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வைகாசி பெருவிழா கடந்த மாதம் 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் கோவிலில் சிறப்பு பூஜைகளும், இரவில் சுவாமி வீதிஉலாவும் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 30-ந் தேதி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது.

தெய்வீக நிகழ்வு

இந்த நிலையில் 12-வது நாள் விழாவான இன்று திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்ச்சி நடந்தது. அதாவது திருஞானசம்பந்தர் குழந்தைப்பருவத்தில், பசியால் அழுதபோது அம்பாள் நேரில் தோன்றி ஞானப்பால் புகட்டியதாக ஐதீகம். இந்த ஐதீக விழா மூல நட்சத்திரத்தன்று பாடலீஸ்வரர் கோவிலில் நடப்பது வழக்கம். அதன்படி மூல நட்சத்திரத்தையொட்டி இன்று, திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்ச்சி நடந்தது.

இதையொட்டி காலையில் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. அதனை தொடர்ந்து 63 நாயன்மார்கள் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் காலை 7.30 மணி அளவில் சாமி சிவகரக தீர்த்த குளத்தில் எழுந்தருளியதும், அங்கு ஒரு குழந்தையை திருஞானசம்பந்தராக பாவித்து தங்க தோடிகானாவில் வைத்து ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பஞ்சமூர்த்திகள் வீதிஉலா

இதையடுத்து காலை 9 மணி அளவில் பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனங்களில் வீதிஉலா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இரவு 8.30 மணி அளவில் திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 9.30 மணிக்கு திருஞானசம்பந்தர் தங்கப்பல்லக்கிலும், பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷபங்களிலும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com