திருக்கல்யாண உற்சவம்.. முருகன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சுவாமி குமரவிடங்க பெருமான்-தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.
திருத்தணி முருகன் கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண உற்சவம்
திருத்தணி கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண உற்சவம்
Published on: 

கந்த சஷ்டி விழாவின் நிறைவு நிகழ்வாக இன்று பல்வேறு முருகன் திருத்தலங்களில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதில் திருத்தணி கோவிலில் மட்டும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு பதிலாக புஷ்பாஞ்சலி நடைபெற்றது. சுமார் 3 டன் மலர்கள் சண்முகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இன்று காலை திருத்தணி மலைக்கோவில் உள்ள காவடி மண்டபத்தில் முருகப் பெருமான், வள்ளி-தெய்வானை திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மஞ்சள், குங்குமம் மற்றும் தாலி வழங்கப்பட்டன.

பக்தர்கள் குவிந்தனர்

கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாள் மற்றும் முகூர்த்த தினம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று திருத்தணி மலைக்கோவிலில் குவிந்தனர். இதனால் மூலவரை தரிசனம் செய்வதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இதேபோல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று இரவு ராஜகோபுரம் அருகே உள்ள மண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமான்-தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. திருப்போரூர், சிறுவாபுரி, வல்லக்கோட்டை, குன்றத்தூர், வடபழனி முருகன் கோவில்களில் திருக்கல்யாணம் கோலகலமாக நடைபெறுகிறது. இந்த வைபவத்தை கண்டுகளித்து மணக்கோலத்தில் முருகப்பெருமானை தரிசனம் செய்வதற்காக முருகன் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

X