கள்ளழகர் கோவிலில் திருக்கல்யாண திருவிழா தொடங்கியது

ஏப்ரல் 1-ந்தேதி அன்று காலையில் பெரியாழ்வார் முன்னிலையில் 4 பிராட்டிமார்களையும் ஒரே நேரத்தில் கள்ளழகர் பெருமாள் மணக்கும் நிகழ்வு நடைபெறுகிறது.
திருக்கல்யாண மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி
திருக்கல்யாண மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி
Published on

மதுரை,

மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருக்கல்யாண திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

விழாவை முன்னிட்டு நேற்று மாலையில் கள்ளழகர் பெருமாள், தேவியர்களுடன் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் மாலையில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியர்களுடன் கள்ளழகர் பெருமாள் சகல பரிவாரங்களுடன் புறப்பாடாகி ஆடி வீதிகள் வழியாக வந்து மண்டபத்தில் எழுந்தருளினார்.

அங்கு பட்டர்களின் வேத மந்திரங்களுடன், விசேஷ பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து அதே பரிவாரங்களுடன் சுவாமி புறப்பாடாகி சென்று இரவு கோவிலுக்குள் இருப்பிடம் சேர்ந்தார். விழாவில் இன்றும், நாளையும் மாலையில் சுவாமி அதே மண்டபத்தில் எழுந்தருள்வார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 1-ந்தேதி அன்று காலையில் திருக்கல்யாண திருவிழா மங்கள இசையோடு, பட்டர்களின் வேத மந்திரங்களுடன் நடைபெறுகிறது. அன்று காலை காலை 9 மணிக்கு மேல் 9.20 மணிக்குள் பெரியாழ்வார் முன்னிலையில் ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண சுந்தரவல்லி தாயார் மற்றும் ஆண்டாள் ஆகிய 4 பிராட்டிமார்களையும் ஒரே நேரத்தில் கள்ளழகர் பெருமாள் ஒரே மேடையில் மணக்கிறார்.

தொடர்ந்து 2-ந்தேதி மஞ்சள் நீர் சாற்று முறையுடன் விழா நிறைவடைகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com