

திருத்துறைப்பூண்டி,
திருத்துறைப்பூண்டி அருகே விட்டுக்கட்டி நல்லமுத்து மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வரம்பியம் ஊராட்சி, விட்டுக்கட்டியில் உள்ள ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன் ஆலயத்தில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஆலயத்தை புதுப்பிக்கும் பணி ஒரு வருடமாக நடைபெற்று வந்தது. உள் பிரகாரம், ஆலய கோபுரங்கள் சரி செய்யப்பட்டு ஸ்தபதியார்கள் மூலம் வர்ணங்கள் பூசும் பணிகளும் நடைபெற்றன.
திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேக விழா தொடங்கியது. யாகசாலைகள் அமைக்கப்பட்டு நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. யாகசாலை பூஜை இன்று காலையில் நிறைவடைந்ததும், கடம் புறப்பாடு நடைபெற்றது.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் கொண்ட கடங்களை சுமந்து ஆலயத்தை சுற்றி வந்து கோபுரத்தை அடைந்தனர். அதன்பின் சரியாக காலை 9 மணி அளவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின்னர் அம்மனுக்கு மகா தீப ஆராதனை நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.