

திருப்பதி,
திருச்சானூரில் 3 நாட்கள் நடைபெறும் சுந்தரராஜ சுவாமியின் அவதார மகோற்சவ விழாவானது, கருட சேவையுடன் நிறைவு பெற்றது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் வளாகத்தில் சுந்தரராஜ சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சுந்தரராஜ சுவாமி அவதார மகோற்சவம் 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு சுந்தரராஜ சுவாமி அவதார மகோற்சவம் 5.7.2026 அன்று தொடங்கியது.
முதல் நாளில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், மகா தீபாராதனை, ஊஞ்சல் சேவை நடைபெற்றது. மாலையில் உற்சவர்கள் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இரண்டாவது நாள் சிறப்பு அபிஷேகம், ஊஞ்சல் சேவையைத் தொடர்ந்து இரவில் அனுமன் வாகன வீதிஉலா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட அனுமந்த வாகனத்தில் சுந்தரராஜ சுவாமி எழுந்தருளி, மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் நிறைவு நாளான நேற்றும் சுந்தரராஜ சுவாமிக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள் மற்றும் சந்தனத்தால் மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மாலையில் ஊஞ்சல் சேவை சிறப்பாக நடந்தது. அதனைத் தொடர்ந்து, கருட சேவை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் சுந்தரராஜ சுவாமி எழுந்தருளி மாட வீதிகளில் பவனி வந்து அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள், 'கோவிந்தா', 'கோவிந்தா' என பரவசத்துடன் முழக்கம் எழுப்பியபடி பகவானை வழிபட்டனர்.
விழாவில் கோவில் துணை நிர்வாக அதிகாரி ஹரிந்திரநாத், உதவி நிர்வாக அதிகாரி தேவராஜுலு, கோவில் ஆய்வாளர் சலபதி, தலைமை அர்ச்சகர் பாபு சுவாமி மற்றும் கோவில் அதிகாரிகள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.