

திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவின் 3-ம் திருநாளில் சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க முத்துகிடா வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த மாதம் 31-ந் தேதி ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.
3-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் தீபாராதனை நடந்தது.
காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் பூங்கேடய சப்பரத்திலும், வள்ளி அம்பாள் கேடய சப்பரத்திலும் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவிலை சேர்ந்தனர். பின்னர் மாலையில் மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
ஆவணித் திருவிழாவின் 4-ம் திருநாளான இன்று (வியாழக்கிழமை) காலை மேலக்கோவிலில் இருந்து சுவாமி தங்க முத்துக்கிடா வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதி உலா வந்து அருள்பாலித்தனர். மாலை 6.30 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் உலா வருகிறார்கள்.