

திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் கந்தசஷ்டி திருவிழாவின் 2-ம் நாளான இன்று சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் அமர்ந்தபடி சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருளினார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று தொடங்கியது. 2-ம் திருநாளான இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து யாக சாலையில் உள்ள சுவாமி ஜெயநாதருக்கும் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.
பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் தங்க சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்துக்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘அரோகரா’ முழக்கம் எழுப்பியபடி சாமி தரிசனம் செய்தனர்.
மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாடுதுறை ஆதினம் கந்த சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருள்கிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடைபெறும். இரவு சுவாமி, வள்ளி-தெய்வானை அம்பாளுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.