திருச்செந்தூர் கோவில் ஆவணித் திருவிழா... சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி யானை வாகனத்தில் வீதிஉலா

ஆவணித் திருவிழாவில் இன்று இரவு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவிலில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது.
திருச்செந்தூர் ஆவணி திருவிழா, சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி வீதிஉலா வந்தனர்
சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி வீதிஉலா வந்த காட்சி.
Published on

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழா 4-ம் நாளான நேற்று சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

ஆவணித் திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த மாதம் 31-ந் தேதி ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகின்றனர்.

4-ம் திருநாளான நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனையும், உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.

வெள்ளி யானை வாகனம்

பின்னர் மாலை 6.30 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளினர். தொடர்ந்து உள்மாட வீதி நான்கிலும், ரதவீதி நான்கிலும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

குடவருவாயில் தீபாராதனை

ஆவணித் திருவிழாவின் 5-ம் திருநாளான இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவிலில் சுவாமி குமரவிடங்க பெருமானும், வள்ளி அம்பாளும் தனித்தனி தங்க மயில் வாகனத்திலும் எழுந்தருளி குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் வீதிஉலா நடக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com