

நெல்லை,
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் மற்றும் தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டு தோறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா வெகுசிறப்பாக நடந்து வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை முன்னிட்டு இன்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. காந்திமதி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி கொடிமரம் முன்பு வந்து சேப்ந்தார். பின்னர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட கொடிபட்டத்திற்கு கொடிமரம் முன்பு வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து மேளதாளங்கள், பஞ்சவாத்தியங்கள் முழங்க ஐப்பசி திருக்கல்யான திருவிழாவிற்கான கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடிமரத்திற்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
15 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் தினந்தோறும் காலை 7 மணிக்கும், இரவு 7 மணிக்கும் காந்திமதி அம்பாள் நான்கு ரத வீதிகளிலும் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கம்பா நதியில் தவமிருக்கும் காந்திமதி அம்பாளுக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி வருகிற 5-ந்தேதி மதியம் நடைபெறுகிறது. கோவிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி வருகிற 6-ந்தேதி அதிகாலை நடைபெறுகிறது.
தென்காசி மாவட்டத்தில், தென்காசி நகரின் மையப்பகுதியில் அமையப்பெற்றதும், வடக்கே உள்ள காசிக்கு நிகரானதாக கருதப்படும் தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயம் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த ஆலயத்தில் சித்திரை விசு, ஐப்பசி விசு, சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் என பல்வேறு விழாக்கள் வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் காசி விசுவநாதபெருமாளின் திருவருள் ஆணைப்படி உலகநாத பாண்டிய மன்னருக்கு லோகநாயகி மகளாகப் பிறந்து, குழல்வாய் மொழியம்மை என்று திருநாமம் பெற்ற லோகநாயகி குழல்வாய் மொழியம்மையை இறைவன் மணம் முடித்து சென்ற காட்சியை உலக மக்கள் காணும் பொருட்டு இத்தலத்தில் எழுந்தருளிய உலகம்மனுக்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் திருக்கல்யாண திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டிற்கான திருக்கல்யாண திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அம்பாள் சன்னதிக்கு முன்பு உள்ள கொடிமரத்தில் பால், சந்தனம், இளநீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. கொடியேற்ற நிகழ்வில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், பக்தர்கள் என திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 11 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் 9-ஆம் நாள் நிகழ்ச்சியாக வருகிற 3- ஆம் தேதி அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளிய பிறகு பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுக்கும் தேரோட்ட நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறுகிறது.
10-ஆம் திருநாள் நிகழ்ச்சியாக நவம்பர் 4-ஆம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும், 11-ஆம் திருநாளான 5-ஆம் தேதி காலை தீர்த்தவாரி மண்டபத்திற்கு அம்பாள் தபசு காட்சிக்காக எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை உலகம்மனுக்கு காசி விசுவநாதர் சுவாமி தபசு காட்சி கொடுக்கும் நிகழ்வும் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.