நவராத்திரி பிரம்மோற்சவம்: அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி

வாகன சேவையின்போது மாட வீதிகளில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள், பகவானை தரிசனம் செய்தனர்.
திருப்பதி பிரம்மோற்சவம், அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அனுமந்த வாகன சேவை
Published on: 

திருமலை,

திருப்பதியில் நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான இன்று காலை மலையப்ப சுவாமி, அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

நவராத்திரி பிரம்மோற்சவம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் வாகன சேவை விமரிசையாக நடைபெறுகிறது. வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, மாட வீதிகளில் வலம் வந்த மலையப்ப சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.

விழாவின் சிகர நிகழ்வாக கருட சேவை நேற்று மாலை 6.30 மணியில் இருந்து இரவு 11.30 மணிவரை வெகுவிமரிசையாக நடைபெற்றது. தங்க கருட வாகனத்தில் மலையப்பசாமி தங்க லட்சுமி காசு மாலை, வைர, வைடூரிய ஆபரணங்கள் அணிந்து எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்தபோது, கேலரிகளில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் ‘கோவிந்தா... கோவிந்தா...' என விண்ணதிர பக்தி முழக்கம் எழுப்பியபடி தரிசனம் செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் கோலாகலம், அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி
அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி

அனுமந்த வாகன சேவை

விழாவின் 6-ம் நாளான இட்னறு காலையில் அனுமந்த வாகன சேவை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட அனுமந்த வாகனத்தில், கோதண்டராமர் வடிவில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி, நான்கு மாட வீதிகளில் வலம் வந்தார். பகவானின் இந்த தெய்வீக திருக்கோலத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தூய பக்தி, தன்னலமற்ற சேவை, பணிவு மற்றும் பகவானிடம் முழுமையாகச் சரணடைதல் ஆகியவற்றின் அடையாளமாக அனுமன் திகழ்கிறார். உன்னதமான நடத்தையும் அசைக்க முடியாத பக்தியும் ஒருவரை தெய்வீகத்தை நோக்கி இட்டுச் செல்லும் என்பதை இந்த வாகன ஊர்வலம் பக்தர்களுக்கு எடுத்துரைக்கிறது.

இந்நிகழ்வில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் பிற அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com