திருப்பதி பிரம்மோற்சவ விழா: தங்கக் கருட வாகனத்தில் மலையப்பசாமி வீதி உலா

கருட வாகன வீதி உலாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருப்பதி பிரம்மோற்சவ விழா: தங்கக் கருட வாகனத்தில் மலையப்பசாமி வீதி உலா
Published on

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான நேற்று இரவு தங்க கருட வாகன வீதிஉலா (கருட சேவை) நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

கருடசேவை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று மாலை 6.30 மணியில் இருந்து 11.30 மணிவரை பிரம்மோற்சவ சிகர நிகழ்ச்சியாக தங்க கருட வாகன வீதிஉலா (கருடசேவை) நடந்தது. மலையப்பசாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

அவருக்கு நவரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட தங்க ஆபரணங்களும், ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த துளசி மாலை, கிளி, சகஸ்ர மாலை, லட்சுமி ஆரம், மகர கண்டி, கடிக ஹஸ்தம் ஆகிய ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

விண்ணதிர்ந்த பக்தி கோஷம்

மாலை 6.30 மணியளவில் தங்கக்கருட வாகன வீதிஉலா தொடங்கியதும் கோவில் வளாகத்தில் திரண்டு இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் "ஏடு குண்டல வாடா.. வெங்கடரமணா.. கோவிந்தா.. கோவிந்தா.." என விண்ணதிர பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

வாகன வீதிஉலா முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், காளைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. மலையப்பசாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

சிங்கப்பூர் கலைஞர்கள்

கருடசேவையில் பல்வேறு மாநிலங்களின் கலைஞர்கள் நடத்திய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் பக்தர்களை கவர்ந்தன. முதல் முறையாக சிங்கப்பூரைச் சேர்ந்த கலைக்குழுவினர் பங்கேற்று தங்களது கலைத்திறனை வெளிப்படுத்தி பக்தர்களின் சிறப்பு கவனத்தை ஈர்த்தனர்.

வாகனச் சேவைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் 14 மாநிலங்களை சேர்ந்த 32 கலைக்குழுக்களில் இடம்பெற்ற 916 கலைஞர்கள் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். அதில் மணிப்புரி, மோகினியாட்டம், கதக், கதகளி, குச்சிப்புடி, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் பக்தர்களை கவர்ந்தன. இதற்கிடையே, கோண்டல், டோக்ரி, கண்டா, ஜிஹிஜிஹியா உள்ளிட்ட நாட்டுப்புற நடனங்களும் பக்தர்களை மகிழ்வித்தன.

கருட வாகன வீதி உலாவில் திருமலை பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, தேவஸ்தான அதிகாரி முத்தாடா ரவிச்சந்திரா, கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி உள்பட லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com