திருப்பதி பிரம்மோற்சவ விழா... அனுமன், கஜ வாகனங்களில் கோவிந்தராஜ சுவாமி வீதிஉலா

வாகன சேவையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பகவானை தரிசனம் செய்தனர்.
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவில் பிரம்மோற்சவ விழா, கஜ வாகனத்தில் சுவாமி வீதிஉலா
கஜ வாகன சேவை
Published on

திருப்பதி,

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை உற்சவர் கோவிந்தராஜ சுவாமி அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வாகன வீதிஉலா முன்னால் பஜனை, கோலாட்டம், பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள் நடந்தன. சாமி வீதிஉலா வந்தபோது பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூரம் மற்றும் நெய் தீப ஆரத்தி காண்பித்தும் ‘கோவிந்தா’ கோஷம் எழுப்பி பகவானை தரிசனம் செய்தனர்.

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவில் பிரம்மோற்சவம், அனுமந்த வாகனத்தில் சுவாமி வீதி உலா
அனுமந்த வாகன சேவை

வசந்தோற்சவம்

ராமபிரானின் தலைசிறந்த பக்தராகப் போற்றப்படும் அனுமன், பக்தி, வலிமை மற்றும் சரணாகதி தத்துவத்தின் அடையாளமாகத் திகழ்கிறார். அனுமந்த வாகனத்தின் வாயிலாக, உற்சவர் கோவிந்தராஜ சுவாமி பக்தர்களுக்கு நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குறித்த செய்தியை உணர்த்தவே அனுமந்த வாகனத்தில் உலா வந்தார்.

அதன்பிறகு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜ சுவாமிக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், பன்னீர், இளநீர் ஆகியவற்றால் ஸ்நாபன திருமஞ்சனம் எனப்படும் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மாலை 3 மணிக்கு உற்சவர்களுக்கு வசந்தோற்சவம் நடந்தது.

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில் பிரம்மோற்சவம், கஜ வாகனத்தில் பெருமாள் வீதிஉலா
கஜ வாகன சேவை

கஜ வாகன வீதிஉலா

அதைத்தொடர்ந்து தங்கத் திருச்சி வாகனத்தில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமி எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவு 7 மணிக்கு கோவிந்தராஜசாமி கஜ வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அகஜ வாகனம் செழிப்பு, பாதுகாப்பு மற்றும் கர்ம பந்தங்களிலிருந்து விடுதலை ஆகியவற்றை குறிக்கிறது. எனவே, சர்வவல்லமை பொருந்திய பகவானிடம் முழுமையாக சரணடைதல் எனும் செய்தியை உணர்த்தும் வகையில் கஜ வாகன சேவை நடைபெற்றது.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கோவில் அதிகாரிகள், மடாதிபதிகள், அர்ச்சகர்கள், ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com