

திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதனிடையே, சொர்க்கவாசல் திறப்பு குறித்து திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகை அரங்கில் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதனை தொடர்ந்து தேவஸ்தானத்தின் கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சவுத்ரி செய்தியாளர்களிடம் கூறியதாவது;-
“திருமலையில் பிரம்மோற்சவத்துக்கு அடுத்தப்படியாக வைகுண்ட ஏகாதசிக்கு சொர்க்கவாசல் வழியே ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதும். டிசம்பர் 20 முதல் 29-ந்தேதி வரை(10 நாட்கள்) சொர்க்கவாசல் திறந்திருக்கும். இதில் சாமானிய பக்தர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும்.
கடந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசிக்கு 10 நாட்களில் 7.83 லட்சம் பக்தர்கள் மூலவரை தரிசித்துள்ளனர். அதே போன்று, இந்த ஆண்டும் முதல் 3 நாட்கள் ஆன்லைனில் சர்வ தரிசன டோக்கன்கள் குலுக்கல் முறையில் வழங்கப்படும்.
அடுத்த 7 நாட்கள் வெறும் சர்வ தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்படும். டிசம்பர் 25-ந்தேதி வெள்ளியன்று மூலவருக்கு அபிஷேகம் நடைபெறும். அப்போதும் சர்வ தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.