

திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 10 நாட்கள் வைகுண்ட துவார தரிசனத்திற்கான பல்வேறு டிக்கெட்டுகள் மற்றும் டோக்கன்கள் 28-ம் தேதி முதல் வெளியிடப்படுகின்றன.
மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி 'வைகுண்ட ஏகாதசி' என்று அழைக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி நாளில் பெருமாள் கோவில்களில் 'பரமபத வாசல்' (வைகுண்ட வாசல்) திறக்கப்பட்டு அந்த வழியாக பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். இந்த வாசல் வழியாக பக்தர்கள் சென்று தரிசனம் (வைகுண்ட துவார தரிசனம்) செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அடுத்த மாதம் 20-ம் தேதி பரமபத வாசல் திறக்கப்படுகிறது. அன்று முதல் 10 நாட்களுக்கு பரமபத வாசல் தரிசனம் நடைபெறுகிறது. பரமபத வாசல் தரிசனத்திற்கு டிக்கெட்டுகள் இருந்தால் மட்டுமே அனுமதி என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதில் சாமானிய பக்தர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளன.
துவார தரிசனத்திற்கான பல்வேறு தரிசன டிக்கெட்டுகள் மற்றும் டோக்கன்களை வெளியிடும் கால அட்டவணை பின்வருமாறு:
ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் நாளை (நவம்பர் 28) காலை 10 மணிக்கு வெளியிடப்படும். ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் நவம்பர் 30ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.
வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி ஆகிய முதல் இரண்டு நாட்களுக்கான நேரம் குறிப்பிடப்பட்ட சர்வ தரிசன டோக்கன்களைப் (Slotted Sarva Darshan) பெறுவதற்கு, டிசம்பர் 1 முதல் 5 வரை பக்தர்கள் மின்னணு குலுக்கலுக்கு பதிவு செய்யலாம். இந்தப் பதிவு டிசம்பர் 1-ஆம் தேதி காலை 10 மணி முதல் டிசம்பர் 5-ஆம் தேதி மாலை 5 மணி வரை நடைபெறும்.
டைம் ஸ்லாட் சர்வ தரிசன டோக்கன்கள் டிசம்பர் 7-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு மின்னணு குலுக்கல் (e-DIP) மூலம் தேர்வு செய்யப்பட்டு ஒதுக்கீடு செய்யப்படும். டிசம்பர் 8ம் தேதி காலை 10 மணிக்கு நன்கொடையாளர் தரிசன ஒதுக்கீட்டு டிக்கெட்டுகள் வெளியிடப்படும்.
வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசியின் முதல் இரண்டு நாட்களான டிசம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில், முக்கிய பிரமுகர்களைத் தவிர மற்றவர்களுக்கான விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாட்களில் அதிக எண்ணிக்கையிலான பொது பக்தர்கள் தரிசனம் பெறுவதற்கு வசதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
டைம் ஸ்லாட் சர்வ தரிசன டோக்கன்கள் இ-டிப் அமைப்பு மூலம் ஆன்லைனில் வழங்கப்படும். மேலும், இந்த இரண்டு நாட்களுக்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
முதல் இரண்டு நாட்கள் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்கு சர்வ தரிசனம் (பொது தரிசனம்) கிடையாது. எனவே, முதல் இரு நாட்களுக்கும் பதிவு செய்து மின்னணு குலுக்கல் மூலம் சர்வ தரிசன டோக்கன் பெற வேண்டியது அவசியம் ஆகும். அடுத்த 8 நாட்கள் அதாவது டிசம்பர் 22ம் தேதி முதல் 29-ம் தேதி வரை முன்பதிவு செய்யாமல் நேரடியாக தரிசனம் செய்யலாம். ஆனால், இந்த நாட்களில் தரிசனத்திற்கு நீண்ட நேரம் காத்திருக்கவேண்டியிருக்கும்.
தரிசன டிக்கெட்டுகள் மற்றும் டோக்கன்களை தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் (https://ttdevasthanams.ap.gov.in) மட்டுமே முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.