

திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் குப்பம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் தீமிதி நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா, சங்கராமநல்லூர் பேரூராட்சி, குப்பம்பாளையம் அருகே கொழுமம் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.
திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், வழிபாடுகளும் நடைபெற்று வந்தன. பக்தர்கள் பூவோடு எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வந்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் (தீமிதி) வைபவம் இன்று விமரிசையாக நடைபெற்றது. இதற்காக கோவில் வளாகத்தில் பிரம்மாண்ட குண்டம் வளர்க்கப்பட்டிருந்தது. விரதமிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் அம்மனை வேண்டி ‘ஓம் சக்தி, பராசக்தி’ என்று முழக்கம் எழுப்பியபடி அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தீமிதி நிகழ்வை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தீமிதி நிகழ்வை காண்பதற்காக குப்பம்பாளையம், சங்கராமநல்லூர், கொழுமம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தனர்.