துளசி திருமணம்... பகவானுடன் கலந்த பதிவிரதா பக்தை

மகா விஷ்ணுவின் தீவிர பக்தர்கள் துளசி திருமண நாளன்று விரதம் இருப்பது வழக்கம்.
துளசி கல்யாணம் (AI Image). Tulsi Vivah
துளசி கல்யாணம் (AI Image)
Published on: 

இந்து சமய வழிபாட்டில் துளசி வழிபாடு, புனிதமானதாகக் கருதப்படுகிறது. மகாவிஷ்ணுக்கு பிரியமானதாக துளசி இருக்கிறது. இதன் காரணமாகவே துளசியை 'விஷ்ணுப்பிரியா' என்றும் அழைப்பார்கள். விஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படும் சாளக்கிராமத்திற்கும், துளசிக்கும் திருமணம் செய்து வைக்கும் வழக்கம் இன்றளவும் தொடர்ந்து வருகிறது.

துளசி திருமணம்.. புராண தகவல்

துளசி திருமணம் பற்றியும், அதன் சடங்குகள் குறித்தும் பத்ம புராணத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. புராணத்தின்படி துளசிச் செடியானது, முன் காலத்தில் 'பிருந்தா' என்ற அசுர குலப் பெண்ணாக இருந்தாள். அவள் சலந்தர் என்ற அசுர மன்னனை மணந்துகொண்டாள். சலந்தன் கடுமையான தவம் இருந்து பல வரங்களைப் பெற்றிருந்தான். அதன் காரணமாக மூவுலகங்களையும் கைப்பற்ற போர் புரிந்தான்.

பிருந்தாவுக்கு, மகாவிஷ்ணுவின் மீது அதிக பக்தி இருந்தது. நாள் தவறாமல், விஷ்ணுவை அவள் வழிபட்டு வந்தாள். பிருந்தாவின் விஷ்ணு வழிபாடு காரணமாக, சலந்தனை எவராலும் போரில் வெற்றிகொள்ள முடியவில்லை. பிருந்தாவின் பதிவிரதத் தன்மையும், கணவனுக்காக அவள் செய்த விஷ்ணு வழிபாடும் சலந்தரனுக்குப் பெரிய கவசமாக இருந்தது.

இந்த வலிமையுடன் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த சலந்தர் இறுதியாக , சிவபெருமானுடன் போரிட்டான். சலந்தனை தன் சூலாயுதத்தால் பலமுறை சிவபெருமான் குத்தினார். பிருந்தாவின் பக்தி, பதிவிரதைத் தன்மை காரணமாக, அவனுக்கு சிறு காயம் கூட ஏற்படவில்லை. எனவே தேவர்கள் அனைவரும், மகாவிஷ்ணுவிடம் இதற்கொரு தீர்வை கண்டுபிடிக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து மகாவிஷ்ணு, சலந்தனின் உருவம் கொண்டு அவனது வீட்டிற்குச் சென்றார். கணவர்தான் வந்திருக்கிறார் என்று நினைத்த பிருந்தா, அவருக்கு பாத பூஜைகள் செய்தார். கணவனைத் தவிர வேறு ஒருவரின் பாதங்களைத் தொட்டு, பூஜை செய்ததால் அவளது பதிவிரதைத் தன்மை குறைந்தது. இதனால் சலந்தரின் வலிமையும் குறைந்தது.

அதன்பின் நடந்த போரில் சலந்தரை வதம் செய்தார், சிவபெருமான். இதனால் கோபம் கொண்ட பிருந்தா, தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி மகாவிஷ்ணுவை சாளக்கிராமக் கல்லாக மாறும்படி சாபம் அளித்தாள். மேலும், மகாவிஷ்ணு தனது அவதாரமொன்றில் மனைவியான லட்சுமி தேவியைப் பிரிவார் என்றும் சாபமிட்டாள். (பிற்காலத்தில், மகா விஷ்ணுவின் ராமாவதாரத்தின்போது, ​​இந்தச் சாபம் உண்மையானது. அந்த அவதாரத்தில், இலங்கையின் மன்னனான ராவணன் சீதையைத் தூக்கிச் சென்றதால், விஷ்ணு தனது அன்பிற்குரிய மனைவி சீதையைப் பிரிந்து வாடினார்).

சாபமும்.. வரமும்

மகா விஷ்ணுவுக்கு இத்தகைய சாபத்தை அளித்த பிருந்தா, தன் உயிரையும் மாய்த்துக்கொண்டாள். அவளது ஆன்மாவை, மகா விஷ்ணு துளசியாக மாற்றி அருள்புரிந்தார். 'துளசி' என்பதற்கு 'ஒப்பற்றது', 'ஈடு இணை இல்லாதது' என்று பொருள். மறுபிறவியில் துளசியாக அவதரித்த பிருந்தாவை, சாளக்கிராமமாக இருந்த விஷ்ணு மணந்துகொண்டதாகவும் புராணங்கள் சொல்கின்றன. அந்த திருமணம் பிரபோதினி ஏகாதசியில் நடைபெற்றதாகவும் சொல்லப்படுகிறது.

அப்போதிருந்து, துளசி திருமணமும் மற்றும் சாளக்கிராமமும் இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. துளசி இலைகளை (துளசி பத்ரம்) சமர்ப்பிக்காமல் விஷ்ணு பகவானின் வழிபாடு முழுமையடைவதில்லை.

துளசி திருமணம்

இந்த தெய்வீக துளசி திருமணம் 'பிரபோதினி ஏகாதசி' எனும் புனித நாளில் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. 'பிரபோதினி' என்றால் 'விழித்தெழுதல்' என்று பொருள். மகாவிஷ்ணு துயில்கொள்ளும் நான்கு மாதங்களை 'சாதுர்மாசம்' என்று குறிப்பிடுவர். ஆடி மாதத்தில் வரும் சயனி ஏகாதசியில் யோக நித்திரைக்குச் செல்லும் மகாவிஷ்ணு, கார்த்திகை மாதத்தில் வரும் பிரபோதினி ஏகாதசியில் விழிக்கிறார். இந்த காலமானது திருமணப் பருவத்தின் தொடக்கத்தை குறிப்பதாக புராணங்கள் சொல்கின்றன. அப்படிப்பட்ட பிரபோதினி ஏகாதசிக்கும், கார்த்திகை மாத பவுர்ணமிக்கும் இடையே உள்ள எந்த நேரத்திலும் இந்த துளசி திருமணம் நடத்தப்படுகிறது.

கார்த்திகை வளர்பிறையில், 11 அல்லது 12-வது நாளில் இந்த விழா நடைபெறும். இந்த நிகழ்வானது ஒவ்வொரு இடத்திற்கும் தகுந்தபடி மாறுபடவும் செய்யும். அவ்வகையில் இந்த ஆண்டு நாளை மறுநாள் (வளர்பிறை துவாதசி) துளசி விவாக தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

துளசி திருமணம் நடத்துவது எப்படி?

துளசி திருமண சடங்கை கோவிலிலோ அல்லது வீட்டிலோ நடத்தலாம். மகா விஷ்ணுவின் தீவிர பக்தர்கள் துளசி திருமண நாளன்று விரதம் இருப்பது வழக்கம். திருமணச் சடங்கு மாலையில் நடைபெறும்.

சில வீடுகளில் துளசி மாடம் இருக்கும். சில வீடுகளின் முற்றத்தில் துளசிச் செடி இருக்கும். அப்படி இல்லாதவர்கள், இந்த நிகழ்வுக்காக துளசிச் செடியை கொண்டு வந்து வைத்துக்கொள்ளலாம். மாலை நேரத்தில் திருமண நிகழ்வை நடத்த வேண்டும்.

பிருந்தாவின் ஆன்மா இரவில் துளசி செடியில் தங்கியிருந்து, காலை வெளியேறுவதாக நம்பப்படுகிறது. துளசியைச் சுற்றி சிவப்பு நிற ஆடை கட்டி, பந்தல் அமைப்பார்கள். காகிதத்தில் முகம் வரைந்து, செடியில் இணைப்பார்கள். விஷ்ணுவாக, வீட்டில் உள்ள சாளக்கிராம கல்லை பயன்படுத்துவார்கள். சாளக்கிராம கல் இல்லையென்றால், விஷ்ணுவின் பித்தளைச் சிலையை பயன்படுத்துவார்கள்.

திருக்கல்யாண வைபத்திற்குரிய சடங்குகளைச் செய்து, துளசி திருமணம் நடத்தப்படுகிறது.

துளசி விவாக பலன்கள்

துளசி விவாகம் செய்பவர்களின் வாழ்வில் செல்வம், மகிழ்ச்சி பெருகும். அதோடு திருமணத்தடை உள்ளவர்களுக்கு அது நீங்கும். திருமணமாகாத பெண்களுக்கு நல்லதொரு வாழ்க்கைத்துணை அமையும். கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பக்தியுடன் இந்த திருமணத்தை நடத்துபவர்கள், பல யாகங்களைச் செய்த பலனைப் பெறுவார்கள். அதோடு பாவங்கள் நீங்கி, புண்ணியம் வந்து சேரும். மகாலட்சுமியின் வடிவமாகவே துளசியை எண்ணி வழிபடுவதால், இந்த திருமணத்தை செய்பவர்களின் இல்லங்களில் லட்சுமிதேவியின் அருள் நிலைத்திருக்கும் என்பது நம்பிக்கை.

X