

திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழாக்கள் நடக்கின்றன.
சந்திர மற்றும் சூரிய நாட்காட்டிகளை (காலண்டர்களை) ஒருங்கிணைப்பதற்காக, ஏறக்குறைய 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்து நாட்காட்டியில் ஒரு கூடுதல் சந்திர மாதம் சேர்க்கப்படுகிறது. இதுவே 'அதிக மாதம்' எனப்படும் அரிதான நிகழ்வாகும். இந்த அதிக மாதம் வருவதால் (கூடுதல் சந்திர மாதம்) திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 பிரம்மோற்சவ விழாக்கள் நடப்படுகின்றன. இது பக்தர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிப்பதாக இருக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு அதிக மாதம் வருவதால் வருடாந்திர பிரம்மோற்சவம் மற்றும் நவராத்திரி பிரம்மோற்சவம் என இரண்டு பிரம்மோற்சவ விழாக்கள் நடத்தப்படுகின்றன.
செப்டம்பர் 8-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப் பணியும், தொடர்ந்து 14-ந்தேதி மாலை பிரம்மோற்சவ விழா அங்குரார்ப்பணமும் நடக்கிறது. வருகிற 15 முதல் 23-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது.
அதேபோல் அக்டோபர் மாதம் 12 முதல் 20-ந்தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவம் நடக்கிறது. நவராத்திரி பிரம்மோற்சவத்துக்கான அங்குரார்ப்பணம் அக்டோபர் 11-ந்தேதி நடக்கிறது.
பிரம்மோற்சவத்தின்போது தினமும் வாகனச் சேவைகள் காலை 8 மணியில் இருந்து 10 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரையிலும் நடக்கின்றன. 'சிகர' நிகழ்ச்சியாக கருட வாகனச் சேவை மட்டும் மாலை 6.30 மணியளவில் தொடங்கி நள்ளிரவு வரை நடக்கிறது.
உலக நலனுக்காக விழாக்களை நடத்துமாறு படைப்பு கடவுளான பிரம்மாவை சீனிவாசர் அழைத்தபோது பிரம்மோற்சவங்கள் தொடங்கியதாக மரபு கூறுகிறது. அன்று முதல் இந்த 9 நாட்கள் கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
அதிக மாதம் வரும் ஆண்டில், கோவிலில் 2 பிரம்மோற்சவ விழாக்கள் நடக்கின்றன. அதில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் முக்கியமாக கொடியேற்றமும், கொடியிறக்கமும் நடப்பது இல்லை.
வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில், 15-ந்தேதி இரவு 9 மணியளவில் பெரிய சேஷ வாகன வீதிஉலா, 16-ந்தேதி காலை சின்ன சேஷ வாகன வீதிஉலா, இரவு ஹம்ச வாகன விதி உலா, 17-ந்தேதி காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதிஉலா, 18-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா,
19-ந்தேதி காலை மோகினி அலங்காரத்தில் பல்லக்கு வாகன வீதிஉலா, மாலை கருட வாகன வீதிஉலா, 20-ந்தேதி காலை அனுமந்த வாகன வீதிஉலா, மாலை தங்கத்தேரோட்டம், இரவு யானை வாகன வீதிஉலா, 21-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா, 22-ந்தேதி காலை தேரோட்டம், இரவு குதிரை வாகன வீதிஉலா, 23-ந்தேதி காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி, இரவு கொடியிறக்கம் நடக்கிறது.