

கர்நாடக மாநிலத்தின் உத்தர கன்னடா மாவட்டத்தில், சிர்சி என்ற நகரின் அருகே ஷால்மலா ஆற்றுப்பகுதி உள்ளது. இங்கே ஆற்றின் நீர்வழிப் படுகையிலும், ஆற்றின் இரு கரைகளில் உள்ள பாறைகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிவலிங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதனால் இந்தப் பகுதியை 'சகஸ்ரலிங்க தலம்' என்றும் அழைக்கின்றனர்.
தனித்துவமான இந்த புனித தலத்தில், பல சிவலிங்கங்கள் நந்தி சிலையுடன் இணைந்தே செதுக்கப்பட்டுள்ளன. பல சிவலிங்கங்கள் ஆவுடையாருடன் தனித்துவமாக வடிக்கப்பட்டிருக்கின்றன. இந்த சிவலிங்கங்கள் இங்கே புராண காலத்தில் நடந்த ஒரு கதையின் பின்புலத்தில் உருவானதாகவும், ஒரு மன்னரால் உருவாக்கப்பட்டதாகவும் இரு வேறு தகவல்கள் கூறப்படுகின்றன.
புராணத்தின்படி, குருசேத்திரப் போர் தொடங்குவதற்கு முன்பாக, ராஜசூய யாகம் ஒன்றை நடத்தும்படி பாண்டவர்களிடம் கிருஷ்ணர் கூறினார். ஆனால் அந்த யாகத்தை நடத்துவதற்கு 'புருஷாமிருகம்' தேவை. இந்த மிருகமானது, இடுப்புக்கு மேலே மனித வடிவத்திலும், இடுப்புக்குக் கீழே சிங்கத்தின் தோற்றத்திலும் காணப்படும்.
இந்த மிருகத்தை அழைத்துவரும்படி கிருஷ்ணர், பீமனை அனுப்பினார். அதன்படி பீமனும் விரைந்து சென்றார். அப்போது வழியில் அனுமன் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். பாதையில் அவரது நீளமான வால் கிடந்தது. அதை பீமன் அகற்ற முயன்றபோது முடியவில்லை. பின்னர்தான் அவர் அனுமன் என்பதை அவன் தெரிந்துகொண்டான். பீம்னுக்கு தன்னுடைய காலில் இருந்து கொத்தாக முடிகளை பிய்த்துக் கொடுத்து, 'ஆபத்து நேரத்தில் இதைப் பயன்படுத்து' என்று அனுமன் சொன்னார்.
அதைப் பெற்றுக்கொண்டு சென்ற பீமன், காட்டில் புருஷாமிருகத்தைக் கண்டான். பாண்டவர்கள் நடத்தும் ராஜசூய யாகத்துக்கு வரும்படி அழைத்தான். அதற்கு அந்த மிருகம், 'நீ முன்னால் செல்ல நான் பின்னால் உன்னைத் தொடர்கிறேன். ஆனால் நான் மனம் இயங்கும் வேகத்தில் ஓடுவேன். உன்னைப் பிடித்துவிட்டால், சாப்பிட்டுவிடுவேன்' என்ற நிபந்தனையை விதித்தது.
பீமனும் ஒப்புக்கொண்டு முன்னால் ஓடினான். புருஷாமிருகம் பின்தொடர்ந்தது. ஒருகட்டத்தில் பீமனைப் பிடிப்பதுபோல் அது நெருங்கிவிட்டது. அப்போது பீமன், அனுமன் தந்த முடிக் கற்றையில் இருந்து ஒன்றை எடுத்து கீழே போட்டான். அது சிவலிங்கமாக மாறியது. புருஷாமிருகம். சிவலிங்கத்தைக் கண்டால் வழிபாடு செய்யாமல் அவ்விடத்தை விட்டு அகலாது என்பதால், அந்த சிவலிங்கத்துக்குப் பூஜை செய்தது. அந்த நேரத்தைப் பயன்படுத்தி பீமன் முன்னேறினான். ஆனாலும் மனஓட்டத்தின் வேகத்தில் பயணிக்கும் புருஷாமிருகம் மீண்டும் பீமனை நெருங்கி விட்டது.
இப்போது பீமன் தன்னிடம் இருந்த முடிக் கற்றை முழுவதையும் கீழே போட்டான். அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முடிகள் இருந்தன. அவை ஒவ்வொன்றும் சிவலிங்கங்களாக மாறின. ஒவ்வொரு சிவலிங்கத்துக்கும் புருஷாமிருகம் பூஜை செய்து வணங்கிவிட்டுப் புறப்படுவதற்கு முன், பீமன் தன் இருப்பிடம் சென்றுவிட்டான். அதன் பிறகே புருஷாமிருகத்தால் அங்கே செல்ல முடிந்தது. ராஜசூய யாகமும் சிறப்பாக நடைபெற்றது. அப்படி பீமன் கீழே போட்ட முடிக்கற்றையில் இருந்து உருவான சிவலிங்கங்களே இந்த ஷால்மலா ஆற்றுப்பகுதியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த சகஸ்ர லிங்கங்களுடன், 6 அடி உயரம் உள்ள பிரமாண்ட நந்தி சிலையும், விநாயகர், நாகர் சிலைகளும், புராணக் காட்சிகளை சித்தரிக்கும் சிற்பங்களும்கூட இப்பகுதியில் உள்ளன.
இந்த சகஸ்ரலிங்கங்களை தரிசிக்க சிறந்த காலம் அக்டோபர் முதல் மார்ச் வரை ஆகும். இக்காலத்தில் வானிலை இதமாக இருப்பதுடன், செதுக்கப்பட்ட சிவலிங்கங்களைக் காண்பதற்கு ஷால்மலா ஆற்றின் நீர்மட்டமும் உகந்ததாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில், ஆற்றின் நீரோட்டம் மெதுவாக இருப்பதால், பக்தர்களும் பயணிகளும் எந்தத் தடையுமின்றி பாறைகளை நுட்பமாக கவனித்து, தனித்துவமான சிற்பங்களைக் காண முடியும்.
குளிர்காலம் (அக்டோபர் - பிப்ரவரி): இது சகஸ்ரலிங்கத்தை தரிசனம் செய்றய மிகவும் உகந்த காலமாகும். இக்காலத்தில் நிலவும் குளிர்ச்சியான வானிலை, சுற்றிப் பார்ப்பதற்கும், ஆன்மீகச் சடங்குகளுக்கும், நடந்து சென்று பார்வையிடவும் ஏற்றதாக இருக்கும்.
கோடைக்காலம் (மார்ச் - மே): மிதமான வெப்பநிலை நிலவக்கூடும், ஆனாலும் அதிகாலை அல்லது மாலை நேரப் பயணம் மேற்கொள்ளலாம்.
மழைக்காலம் (ஜூன் - செப்டம்பர்): கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல லிங்கங்கள் நீரில் மூழ்கிவிடும். சுற்றிலும் பச்சைப்பசேல் என அழகாக காட்சியளித்தாலும், ஆற்றின் நீர்மட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், அப்பகுதியில் உள்ள சிவலிங்ககளை சுற்றிப் பார்ப்பதற்கோ அல்லது சடங்குகள் செய்வதற்கோ இந்த சீசன் உகந்ததல்ல.
மகா சிவராத்திரி சமயத்தில் (பிப்ரவரி/மார்ச்) இந்த சிவலிங்கங்களை தரிசிப்பது மிகவும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தந்து சிறப்புப் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம்.
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த காடுகளுக்கும் மலைத்தொடர்களுக்கும் இடையே அமைந்துள்ள இந்த புனிதத் தலம், ஒரு ஆன்மீக யாத்திரைத் தலமாகவும், அதே சமயம் இயற்கை எழில் கொஞ்சும் இடமாகவும் திகழ்கிறது. சிர்சி நகரில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் இப்பகுதி உள்ளது. ஹூப்ளி ரெயில் நிலையத்தில் இருந்து 90 கி.மீ. தொலைவிலும், ஹூப்ளி விமான நிலையத்தில் இருந்து 100 கிமீ தொலைவிலும் உள்ளது.