

அமாவாசை என்பது ஆன்மிகத்திலும், ஜோதிட சாஸ்திரத்திலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த புனித நாளாக கருதப்படுகிறது. அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தால் அவர்களின் முழு ஆசியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும் புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையே 'மகாளய அமாவாசை' என்று அழைக்கப்படுகிறது. இது 'பித்ரு அமாவாசை' என்றும், 'சர்வ பித்ரு அமாவாசை' என்றும், 'பித்ரு மோட்ச அமாவாசை என்றும் பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது.
எல்லா மாதங்களிலும் அமாவாசை வந்தாலும், மூன்று அமாவாசைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. அவை ஆடி மாதத்தில் வரும் 'ஆடி அமாவாசை', புரட்டாசி மாதத்தில் வரும் 'மகாளய அமாவாசை', தை மாதத்தில் வரும் ‘தை அமாவாசை'. இவற்றில் மற்ற அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்ய தவறியவர்கள் கூட மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்யலாம்.
மறைந்த முன்னோர்கள் ஆடி அமாவாசையின்போது, பித்ரு லோகத்தில் இருந்து புறப்பட்டு பூமியை நோக்கி பயணிப்பார்கள் அப்படி புறப்பட்டவர்கள் ஆவணி மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு அடுத்த நாளில் பூமிக்கு வந்துசேர்வார்கள். அடுத்த வரும் 15 நாட்களும் அவர்கள் பூமியிலேயே தங்கி இருந்து அவர்களின் வம்சத்தினர் அளிக்கும் நீரையும், உணவையும் ஏற்றுக்கொள்வார்கள். பின்னர், மகாளய அமாவாசை முடிந்ததும் மீண்டும் பித்ரு லோகம் நோக்கி புறப்படுவார்கள் என்பது நம்பிக்கை. அவ்வாறு பித்ரு லோகம் திரும்பி செல்லும் நாளே தை அமாவாசை என்று சொல்லப்படுகிறது.
ஆவணி மாதம் பவுர்ணமிக்கு பிறகு வரும் பிரதமை நாள் தொடங்கி அடுத்து வரும் 15 நாட்களும் 'மகாளய பட்சம்' என்று அழைக்கப்படுகிறது. 'பட்சம்' என்றால் 15 நாட்கள் கொண்ட கால அளவை குறிப்பதாகும். மகாளய பட்ச காலத்தின் நிறைவாக வருவதே மகாளய அமாவாசை ஆகும். பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வரும் முன்னோர்கள், தங்கள் சந்ததியினரிடம் இருந்து அவர்கள் அளிக்கும் பித்ரு தர்ப்பணம், சிரார்த்தம், தானம் ஆகியவற்றை ஏற்றுக் கொண்டு, தங்களின் குடும்ப உறுப்பினர்களை ஆசீர்வதித்து செல்லும் காலமாக மகாளய பட்ச காலம் கருதப்படுகிறது.
மாதந்தோறும் வரும் அமாவாசைகளில், முன்னோர்களில் யாரை நினைத்து தர்ப்பணம் கொடுக்கப்படுகிறதோ, அவர்கள் மட்டுமே தர்ப்பணத்தை பெற்றுக்கொண்டு ஆசி வழங்குவர். ஆனால், மகாளய அமாவாசையில் தர்ப்பணம் கொடுத்தால், முன்னோர்கள் அனைவரும் அதாவது 21 தலைமுறையைச் சேர்ந்த பித்ருக்கள் ஒன்றாக வந்து தர்ப்பணத்தை பெற்றுக்கொண்டு ஆசி வழங்குவதாக கூறப்படுகிறது. இதனால்தான் மகாளய அமாவாசையில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. மேலும், பித்ருக்கள் இறந்த திதி தெரியாதவர்கள் கூட இந்த மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்யலாம்.
இந்த ஆண்டு மகாளய அமாவாசை திதி, அக்டோபர் மாதம் 9-ந் தேதி இரவு தொடங்கி 10-ந் தேதி இரவு முடிகிறது. முன்னோர்களின் பெயரை உச்சரித்து, கையில் உள்ள எள்ளின் மீது தண்ணீரை ஊற்றி, அந்த தண்ணீரை தர்ப்பைகளின் மீது ஊற்ற வேண்டும். இதுவே தர்ப்பண வழிபாடாகும். தர்ப்பணம் செய்தபின் தெற்கு திசையை நோக்கி விழுந்து வணங்க வேண்டும்.
மகாளய அமாவாசை நாளன்று, பித்ருக்களுக்கு என்ன பிடிக்குமோ அதை சமைத்து படைக்க வேண்டும். அன்றைய தினம் காகத்திற்கு உணவு இட்ட பிறகே சாப்பிடுவது வழக்கம்.
பொதுவாக, முன்னோர்கள் தர்ப்பணத்துக்கு புனித நதிகள், கடற்கரை மற்றும் குளக்கரை போன்ற இடங்கள் மிகவும் சிறப்பானதாகும். ராமேஸ்வரம், திருச்சி அம்மா மண்டபம், திருப்புவனம் போன்ற தலங்களில் தர்ப்பணம் செய்ய லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள். மகாளய அமாவாசை அன்று பக்தியோடு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் அதற்கேற்ற முழுமையான பலன்களை பெறலாம். அன்றைய தினம் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம் போன்றவை செய்வது சிறப்பு. மகாளய அமாவாசையில் தர்ப்பணம் செய்வதால் முன்னோர்களின் ஆசியோடு, வாழ்வு உயர்வு பெறும் என்பது நம்பிக்கை.