

டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டம் காண்டர் கிராமத்தில் உள்ளது மத்தியமகேஷ்வர் திருக்கோவில். பஞ்ச கேதார் தலங்களில் இந்த கோவிலும் ஒன்று. பனிப்பொழிவு காரணமாக குளிர்காலத்தில் மூடப்படும் இக்கோவில் கோடைக்கால யாத்திரைக்காக மே மாதம் திறக்கப்பட்டு, நவம்பர் நடுப்பகுதி வரை கிட்டத்தட்ட 6 மாத காலம் பக்தர்களின் வழிபாட்டிற்காக அனுமதிக்கப்படும்.
அவ்வகையில் இந்த ஆண்டின் கோடை காலம் துவங்கிய நிலையில், பாரம்பரியச் சடங்குகள் மற்றும் வேத மந்திரங்கள் முழங்க, கோவில் நடை திறக்கப்பட்டது. நேற்று (மே 21) காலை 11.30 மணிக்கு கடக லக்னத்தில் நடை திறப்பு விழா நடைபெற்றது.
நடை திறப்பையொட்டி கோவில் முழுவதும் மலர்களால் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கம் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அர்ச்சகர் சிவஷங்கர் லிங் கோவில் நடையை திறந்து சிறப்பு பூஜைகள் செய்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். முதல் நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
கோவில் நடை திறப்பின்போது எடுத்த புகைப்படங்களை உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி, எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், “பஞ்ச கேதார் தலங்களில் ஒன்றான மத்தியமகேஷ்வர் கோவில் நடை, உரிய சடங்குகளுடனும் வேத மந்திர முழக்கங்களுடனும் பக்தர்களின் தரிசனத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளன. நம்பிக்கையும், பக்தியும், ஆன்மீக ஆற்றலும் நிறைந்த இந்த தேவபூமியில் நடைபெறும் புனிதப் பயணத்திற்கு பக்தர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.
சார் தாம் மற்றும் பஞ்ச கேதார் புனித யாத்திரைக்காக வருகை தரும் பக்தர்களின் வசதி, பாதுகாப்பு மற்றும் தடையற்ற பயண அனுபவத்தை உறுதி செய்வதற்கான பணிகளை அரசு மேற்கொண்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் கர்வால் இமயமலையில் பஞ்ச கேதார தலங்கள் அமைந்துள்ளன. கேதார்நாத், துங்கநாத், ருத்ரநாத், மத்தியமகேஷ்வர், கல்பேஷ்வரர் ஆகிய 5 ஆலயங்களும் தான் 'பஞ்ச கேதார தலங்கள்’ என்று போற்றப்படுகின்றன. இந்த ஆலயங்களை பாண்டவர்கள் நிர்மாணித்ததாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.
மாபெரும் குருசேத்திர போரில் உறவினர்களை கொன்று தாங்கள் இழைத்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேடவும், சிவபெருமானின் அருளைப் பெறவும் வேண்டி பாண்டவர்கள் இமயமலைக்குச் சென்றனர். சிவபெருமான் அவர்களைத் தவிர்த்து, ஒரு காளையின் உருவம் கொண்டு பூமிக்குள் மறைந்துபோனார். அவரது உடல் பாகங்கள் ஐந்து வெவ்வேறு இடங்களில் தோன்றின. கேதார்நாத் -உடல், துங்கநாத்- கைகள், ருத்ரநாத்- முகம், மத்தியமகேஷ்வர்- நாபி (தொப்புள்), கல்பேஷ்வர் - தலைமுடி. இந்த ஐந்து இடங்களிலும் பாண்டவர்கள் ஆலயங்கள் கட்டி வழிபாடு செய்ததாக சொல்லப்படுகிறது.