

வாடிப்பட்டி,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 2-வது வார்டு குலசேகரன்கோட்டை கிராமத்தில், குலசேகர பாண்டிய மன்னன் வணங்கி வழிபாடு செய்த கோட்டை சுவர் அருகே, பழமையும் பெருமை வாய்ந்த செல்லாயி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
திருப்பணிகள் நிறைவுபெற்றதையடுத்து கும்பாபிஷேக விழா தொடங்கியது. முதல் நாள் மாலை 5.30 மணிக்கு விக்னேஸ்வரர் பூஜை, மகாலட்சுமி பூஜை மகா கணபதி ஹோமம் தீப தூப ஆராதனை ஆசிர்வாத திருமுறைகள் நடந்தன.
இரண்டாம் நாள் காலை 8.15 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் சங்கல்பம் புண்ணியாகவாசனம் மகாலட்சுமி ஹோமம், ருத்ர ஹோமம், சுதர்சன ஹோமம் உள்ளிட்டபல்வேறு ஹோமங்கள் செய்து ஆராதனை செய்யப்பட்டது.
மூன்றாம் நாள் காலை 8.15 மணிக்கு ஹரித்திர கணபதி பூஜை, கோமாதா பூஜை, மூல மந்திர ஜெபஹோமம், காயத்ரி ஹோமம், பூரணாஹுதி மற்றும் ஆசிர்வாத திருமறைகள் நடந்தன. பின்னர் காலை 11.15 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்றது. காசி, ராமேஸ்வரம், பாபநாசம், அழகர் கோயில் உள்ளிட்ட பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கலசம் கோபுரத்தை அடைந்ததும், அந்த புனித நீரை கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின் செல்லாயி அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை, அர்ச்சனைகள் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.