சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் வைகாசி திருவிழா... நிகழ்ச்சிகள் விவரம்

வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அய்யா கலி வேட்டையாடும் நிகழ்வு மே 29-ம் தேதி நடைபெறுகிறது.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் வைகாசி திருவிழா... நிகழ்ச்சிகள் விவரம்
Published on

தென்தாமரைகுளம்,

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைபதியில் ஆண்டுதோறும் ஆவணி, தை, வைகாசி ஆகிய மாதங்களில் திருவிழாக்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா நாளை மறுநாள் (22-ம் தேதி) வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பணிவிடையை குருமார்கள் பையன்ஸ்ரீராம், பையன் சிவராஜ், பையன் பொன்ராஜ், ஸ்ரீராம பையன் ஆகியோர் செய்கின்றனர். ஜூன் 1-ம் தேதி வரை 11 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.

நிகழ்ச்சிகள்

திருவிழாவின் முதல் நாளான வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணி அளவில் கொடி ஏற்றுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன. நிகழ்ச்சிக்கு குரு பையன் காமராஜ் தலைமை தாங்குகிறார். குருமார்கள் பால் பையன், பையன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். குரு பையன் ராஜா கொடியேற்றி வைக்கிறார்.

பின்னர், பணிவிடையும், தர்மங்களும், வாகன பவனியும் நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு அன்னதர்மம் நடைபெறுகிறது. மாலையில் பணிவிடையும் இரவு அய்யா, தொட்டில் வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

23-ம் தேதி மாலையில் அய்யா மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். 24-ம் தேதி இரவு அன்னவாகனத்திலும், 25-ம் தேதி மாலையில் பூஞ்சப்பரத்திலும் எழுந்தருள்கிறார். 26-ம் தேதி அய்யா பச்சைசாற்றி சப்பர வாகனத்திலும், 27-ம் தேதி அய்யா சர்ப்ப வாகனத்திலும், 28-ம் தேதி அய்யா கருட வாகனத்திலும் எழுந்தருள்கிறார்.

கலி வேட்டை

8-ம் நாள் விழாவான 29-ம் தேதி அய்யா குதிரை வாகனத்தில் எழுந்தருளி சாமிதோப்பு, முத்திரி கிணறு சமீபம் கலி வேட்டையாடுதல் நிகழ்வு நடக்கிறது. அதன் பிறகு அய்யா குதிரை வாகனத்தில் செட்டிவிளை, சாஸ்தான்கோவில்விளை, சோட்டப்பணிக்கன் தேரிவிளை, காமராஜபுரம் வழியாக சாமிதோப்பு வந்தடைகிறார்.

30-ம் தேதி அய்யா அனுமார் வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். 31-ம் தேதி நள்ளிரவு 12 மணி அளவில் அய்யா இந்திர விமானம் வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வருகிறார்.

தேரோட்டம்

திருவிழாவின் 11-ம் நாளான ஜூன் 1-ம் தேதி திங்கட்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது. நண்பகல் 12 மணிக்கு அய்யா பல்லக்கில் பஞ்சவர்ண தேருக்கு எழுந்தருளியதும், பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து வழிபடுவார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com