

சிதம்பரம்,
பிரசித்தி பெற்ற சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா தொடங்கியது. நேற்று இரவு விநாயகர் வழிபாடு மற்றும் காப்புக்கட்டுதலுடன் விழா தொடங்கிய நிலையில், தினமும் சிறப்பு பூஜை, வாகன வீதி உலா நடைபெறுகிறது.
இன்று சூரிய பிரபை வாகன வீதி உலா நடைபெறுகிறது. நாளை (9-ஆம் தேதி) சந்திர பிரபை வாகனம், 10-ம் தேதி பூதகி வாகனம், 11-ஆம் தேதி தெருவடைச்சான் (அன்ன வாகனம்), 12-ஆம் தேதி காமதேனு வாகனம், 13-ஆம் தேதி கைலாய வாகனம், 14-ஆம் தேதி ரிஷப வாகனம் என தினமும் ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, மே 15-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற உள்ளது. 16-ஆம் தேதி சிவப்பிரியையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். 17 ஆம் தேதி மஞ்சள்நீர் விளையாட்டு, முத்துப்பல்லக்கு வீதிஉலா, 18-ஆம் தேதி தெப்ப உற்சவம் மற்றும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறுகிறது. மே 19-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் திருவஞ்சல் உற்சவத்துடன் திருவிழா நிறைவுபெறுகிறது.