

திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 12 மாதமும் திருவிழா நடைபெறும். அதில், வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா நாளை மறுநாள் (21-ந் தேதி) தொடங்கி 31-ந் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான 21-ந்தேதி மாலை 6 மணியளவில் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்பாளுக்கு காப்பு கட்டுதல் நடக்கிறது. தொடர்ந்து சண்முகர் சன்னதியில் தெய்வானை, வள்ளி அம்பாளுடன் சண்முகருக்கு காப்பு கட்டுதல் நடக்கிறது.
பின்னர் சுவாமி, தெய்வானை அம்பாளுடன் சிம்மாசனத்தில் அமர்ந்து சகல பரிவாரங்களோடு புறப்பட்டு கோவிலுக்குள் உள்ள வசந்த மண்டபத்தை 3 முறை வலம் வருகிறார். மேலும் வசந்த மண்டபத்தில் அமைக்கக்கூடிய ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
30-ந் தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு உற்சவர் சன்னதியில் இருந்து புறப்பட்டு வசந்த மண்டபத்தில் சுவாமி, அம்பாளுடன் எழுத்தருளி ஊஞ்சலாடும் நிகழ்ச்சி நடக்கிறது. சிகர நிகழ்ச்சியாக 30-ந்தேதி விசாக திருவிழா நடக்கிறது. அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து கோவிலில் தரிசனம் செய்வார்கள். மேலும் ஏராளமான பக்தர்கள் பால்குடங்கள், காவடிகள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
மேலும் சண்முகபெருமான் வள்ளி மற்றும் தெய்வானை அம்பாளுடன் சண்முகர் சன்னதியில் இருந்து இடம் பெயர்ந்து கோவிலுக்குள் கம்பத்தடி மண்டப வளாகத்தில் உள்ள விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளுவார். இத்தகைய நிகழ்ச்சி நடைபெறுவது ஆண்டுக்கு ஒரு முறை என்பது தனி சிறப்பு. பின்னர் பத்தர்கள் கொண்டு வரும் பால் மூலம் வள்ளி, தெய்வானை சமேத சண்முகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் நடைபெறும்.
திருப்பரங்குன்றம் கோவிலை பொறுத்தவரை மலையை குடைந்து கோவிலின் கருவறை அமைந்துள்ளதால் முருகப்பெருமானின் திருமேனியில் அபிஷேகம் கிடையாது. மாறாக முருகப்பெருமானின் திருக்கரத்தில் உள்ள வேலுக்கு மட்டுமே அபிஷேகம் நடந்து வருகிறது. இதே சமயம் ஆண்டுக்கு ஒரு முறை விசாக திருவிழா நாளில் சண்முகப்பெருமானுக்கு அதிகாலை 4.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை இடைவிடாது சுமார் 10 மணி நேரத்திற்கு மேல் குடம், குடமாக பாலாபிஷேகம் நடை பெறுவது தனிச்சிறப்பாகும்.
கோவிலில் தினமும் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு வருகிறது. ஆனால் விசாக திருவிழாவையொட்டி ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே நடை திறக்கப்படுகிறது. அதன்படி 30-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது.