

பழனி,
வைகாசி மாத பவுர்ணமி தினம் விசாக நட்சத்திரத்தில் முருகப்பெருமான் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த நாள் வைகாசி விசாக திருவிழாவாக முருகன் கோவில்களில் கொண்டாடப்படுகிறது. அதன்படி, பழனி முருகன் கோவிலில் இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பெரியநாயகியம்மன் கோவிலில், ஆறு கலசங்கள் வைத்து, சிறப்பு அபிஷேகம், பூஜைகள், அர்ச்சனைகள் செய்யப்பட்டு, இன்று காலை 9.15 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் முத்துகுமாரசுவாமி வள்ளி தெய்வானையுடன் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்று ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என சரண கோஷம் எழுப்பியபடி முருகப்பெருமானை வழிபட்டனர். திருவிழா தொடங்கிய நிலையில் பழனியில் பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர்.
10 நாட்கள் நடக்கும் விசாகத் திருவிழாவில் தினசரி காலை, மாலையில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். விழாவின் 6-ம் நாளான 29-ந்தேதி இரவு 7.30 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
30-ந்தேதி வைகாசி விசாக நாளன்று பெரிய நாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. அன்று மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.