

கன்னியாகுமரி,
உலகப் புகழ்பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 30-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.
திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனை, அன்னதானம், வாகன பவனி, சப்பர ஊர்வலம், நாதஸ்வர கச்சேரி, இன்னிசைக் கச்சேரி, பக்தி சொற்பொழிவு, மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
5-ம் திருவிழாவான நேற்று மாலை சிவசங்கரனின் சமய உரையும் அதைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு பலவகையான மலர்களால் அம்மனுக்கு புஷ்பாபிஷேகமும் நடந்தது. பின்னர் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
அதன்பிறகு அம்மன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கோவிலில் இருந்து புறப்பட்ட இந்தவாகன பவனி சன்னதி தெரு, கன்னியம்பல மண்டபம், தெற்கு ரத வீதி, பிள்ளையார் கோவில் தெரு, நடுத் தெரு மேல ரதவீதி, வடக்கு ரத வீதி, கீழ ரத வீதி வழியாக மீண்டும் கன்னியம்பலம் மண்டபத்தை சென்றடைந்தது.
அந்த மண்டபத்துக்குள் அம்மன் சிறிது நேரம் இளைப்பாறினார். அதன்பிறகு அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் அங்கிருந்து வாகன பவனி புறப்பட்டு சன்னதி தெரு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய் பழம் படைத்து "திருக்கணம்"சாத்தி வழிபட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் திரைப்பட தயாரிப்பாளர் கே. எல். போஸ் , கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த், அருள்மிகு கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில் பக்தர்கள் சங்க தலைவர் வக்கீல் சிவகுமார் நாகப்பன் செயலாளர் நாயகம். பொருளாளர் பப்பு உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
6-வது நாளான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு பகவதி அம்மனுக்கு எண்ணெய், பால்,தயிர், இளநீர், பன்னீர், நெய், தேன், மஞ்சள் பொடி, சந்தனம், களபம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
முன்னதாக யானை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 11 மணிக்கு அம்மனுக்கு தங்கக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதைத் தொடர்ந்து 11-30 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனையும் பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடந்தது. மாலை 6 மணிக்கு சமய உரையும் இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் நடக்கிறது. அதன் பிறகு பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது.
அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு இந்திர வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.