

மக்களின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அவர்களின் உயிரை எடுக்கும் பணியை செய்யும் எம தர்மனுக்கு மனதுக்குள் ஒரு கவலை எழுந்தது. எத்தனையோ நல்ல பதவிகள் இருக்கும்போது, தனக்கு மட்டும் ஏன் உயிர்களை எடுக்கும் பதவியை சிவபெருமான் கொடுத்துள்ளார் என்று மிகவும் வருந்தினார்.
திருவாரூர் சென்று தியாகராஜரிடம் தனது மனக்குறையை சிவபெருமானிடம் தெரிவித்து வேண்டினார். அப்போது ஸ்ரீவாஞ்சியம் சென்று வழிபடும்படி அசரீரி கூறியது. அதன்படி எமதர்மன், ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி திருத்தலத்திற்கு வந்து சிவனை நோக்கி கடும் தவம் இருந்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த இன்றவன், மாசி மாதம் பரணி நட்சத்திர நாளில் காட்சி தந்து, `வேண்டும் வரம் கேள்’ என்றார்
அதற்கு எமதர்மன், “இறைவா.. அனைத்து உயிர்களையும் எடுக்கும் பதவி எனக்கு தந்துள்ளதால், எல்லாரும் என்னை கண்டு பயப்படுகின்றனர், திட்டித் தீர்க்கின்றனர். பல கொலைகளால் ரோத பிரம்மா பிடித்து என்னை வாட்டுகிறது, பாவமும் தொடர்கிறது, மன நிம்மதியே இல்லை” என்றார்.
எமனின் கோரிக்கையை ஏற்ற இறைவன், `எமதர்மனே.. இனிமேல் எமன் உயிரை பறித்து விட்டான் என்று யாரும் கூறமாட்டார்கள். நோய் வந்ததாலும் வயதாகி விட்டதாலும், விபத்து ஏற்பட்டும் இறந்தான் என்றும் கூறுவார்கள். இதனால் பழியும், பாவமும் இனி உனக்கு கிடையாது. மேலும் நீ தவம் செய்த இந்த தலத்திற்கு ஏதோ ஒரு விதத்தில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே வர அனுமதிக்க வேண்டும். இத்தலத்தில் தரிசனம் செய்தவர்களுக்கு மறுபிறப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அமைதியான இறுதிக்காலத்தை தர வேண்டும். மேலும் நீ இத்தலத்தின் க்ஷேத்திர பாலகனாக விளங்குவாய். இத்தலத்திற்கு வருபவர்கள் உன்னை முதலில் தரிசனம் செய்த பின்னரே என்னை தரிசிப்பார்கள்” என்று அருளினார்.
ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோவிலின் அக்னி மூலையில் தெற்கு நோக்கி எமதர்மனும், சித்ரகுப்தனும் ஒரே சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்கள். எமதர்மனுக்கு பக்தர்கள் வடை மாலை சாற்றி வழிபடுகின்றனர். எமதர்மனை சாந்தி செய்யும் விதத்தில் இங்கு அபயுள் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி செய்து நீண்ட ஆயுள் பெறலாம். இங்கு யோக நிலையில் எமதர்மன் இருப்பதால் இங்கு வந்து தரிசனம் செய்பவர்களுக்கு மரண பயம் நீங்கும் என்பது ஐதீகம்.