

திருப்பதி,
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆகஸ்ட் 21-ந்தேதி வரலட்சுமி விரத பூஜை நடக்கிறது. இதையொட்டி, கோவில் அதிகாரிகளும், அர்ச்சகர்களும் திருமலையில் உள்ள தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் முகாம் அலுவலகத்தில், தலைவர் பி.ஆர். நாயுடுவை சந்தித்து, வரலட்சுமி விரத பூஜையில் பங்கேற்குமாறு முறைப்படி அழைப்பு விடுத்தனர்.
அப்போது அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, அதிகாரிகளிடம் கூறியதாவது:-
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 21-ந்தேதி நடக்க உள்ள வரலட்சுமி விரத பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி பங்கேற்கும் வகையில் விரிவான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.
பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், அன்னப்பிரசாதம், ஒழுங்குபடுத்தப்பட்ட தரிசன வரிசைகள், பாதுகாப்பு, தூய்மை, மருத்துவ வசதிகள், போக்குவரத்து ஒழுங்குமுறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பாக ஏற்பாடு செய்ய வேண்டும். அனைத்துத்துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, பக்தர்கள் பக்தி நிறைந்த அமைதியான சூழலில் விரதத்தை கடைப்பிடிக்க வழிவகுக்க வேண்டும். மேலும், விழாவை முன்னிட்டு கோவிலும், ஆஸ்தான மண்டபமும் மலர்களால் அழகுற அலங்கரிக்கப்பட்டு, ஆன்மிக எழுச்சியை ஏற்படுத்தும் சூழலை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் கோவில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு மற்றும் அவரின் மனைவிக்கு ஆசி வழங்கினர். கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத் பட்டு வஸ்திரங்களை வழங்கி, வரலட்சுமி விரத மகோற்சவ அழைப்பிதழை வழங்கினார். அப்போது கோவில் அர்ச்சகர் பாபுசுவாமி மற்றும் பிற அதிகாரிகள் உடன் இருந்தனர்.