

ஆரணி,
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி இரும்பேடு ஏ.சி.எஸ். நகரில் உள்ள வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் 4-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் முதல் சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டன. திருப்பதியில் இருந்து பட்டாச்சாரியார்கள் கலந்து கொண்டு யாக பூஜைகள் நடத்தினர். தொடர்ந்து புனித நீரால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி, அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும் 108 சீர்வரிசைகளுடன் சீனிவாச பெருமாள் திருக்கல்யாணமும் நடந்தது.
இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு மாங்கல்ய கயிறு, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கல் பொருட்கள் வழங்கப்பட்டது. காலை முதல் மாலை வரை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் உலக நன்மைக்காகவும், குடும்ப நன்மைக்காகவும் குத்துவிளக்கு பூஜை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.