

வேலூர்,
வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோவிலில் உலக நன்மை வேண்டி 10,008 நெய் தீபங்கள் ஏற்றி பிரம்மாண்ட வழிபாடு நேற்று இரவு விமரிசையாக நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், திருமலைக்கொடியில் ஸ்ரீபுரம் லட்சுமி நாராயணி தங்கக் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், நேற்று (திங்கட்கிழமை) இரவு உலக நன்மை மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில் கோவில் வளாகத்தில் பிரம்மாண்டமான ஸ்ரீ சக்கர வடிவம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் 10,008 நெய் தீபங்கள் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
தீப வழிபாட்டைத் தொடர்ந்து, ஸ்ரீ நாராயணி அம்மனுக்கு சிறப்பு ஊஞ்சல் சேவை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. 10,008 தீபங்களின் ஒளியில் கோவில் வளாகம் முழுவதும் ஒளி வெள்ளத்தில் ஜொலித்தது.
இந்த பிரம்மாண்ட வழிபாட்டில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் திரளாகக் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.