நிலையான அமைதி எது?


நிலையான அமைதி எது?
x

இயேசு சீடர்களை தேர்ந்தெடுத்து நற்செய்தி பணிக்கு அனுப்புகிறபோது அவர்களிடம், “நீங்கள் எந்த வீட்டிற்குச் சென்றாலும் 'அமைதி உரித்தாகுக' என்று முதலில் சொல்லுங்கள்” என்கிறார்.

உள்ளத்திலும், இல்லத்திலும் அனைவரும் தேடி அலைகிற ஒன்றாக இருப்பது அமைதி. அந்த அமைதி எங்கு இருக்கிறது?, அதை எப்படி பெறுவது?, எது நிலையான அமைதி? என்பதை விவிலிய சான்றுகளுடன் பார்ப்போம்.

வெளியில் சத்தமின்றி இருப்பது புற அமைதி, உள்ளத்தில் சங்கடம் இன்றி, நிம்மதியாக இருப்பது உள்ளார்ந்த அமைதி. இந்த அக அமைதியை பெறுவதற்காக, அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருப்பதை விட, உட்கார்ந்து நம் உள்ளத்தை உற்று நோக்கி பார்க்க வேண்டும்.

நாம் அமைதி என்று நினைத்துக் கொண்டு இருக்கிற உலக செல்வங்களோ, புகழோ, பதவியோ, நிலையானது அல்ல. அவை அழிந்துவிடும். ஆனால் இறைவன் தருகிற அமைதியே நிலையானது. அழிவற்றது. மனதிற்கு ஆறுதலை தரக்கூடியது.

இது குறித்து இயேசு, “அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன். என் அமைதியை உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம், மருள வேண்டாம்” என்று கூறுகிறார்.

இவ்வாறு இறைவன் தருகிற அமைதியை பெறுவது எப்படி? என்பதை ஒரு புனிதரின் வாழ்க்கை வழியாக புரிந்து கொள்ளலாம்.

இத்தாலி நாட்டில் அசிசி நகரில் ஒரு செல்வந்த குடும்பத்தில் பிறந்தவர் புனித பிரான்சிஸ் அசிசியார். அவர் தனது செல்வ செழிப்பான வாழ்க்கை மன அமைதியை தரவில்லை என்பதை உணர்ந்தார். எனவே அனைத்தையும் விட்டுவிட்டு துறவியாக மாறினார். ஏழைகளுக்கும், தொழுநோயாளிகளுக்கும் பணிவிடை செய்தார். பிச்சை எடுத்து உண்டார். இறைவனை எல்லா உயிர்களிலும் கண்டார். செடிகளையும், பறவைகளையும் தன் சகோதர சகோதரிகள் என்றார். இப்படியாக இறைவனோடும், இயற்கையோடும் ஏழை எளிய மக்களோடும் ஒன்றிணைந்து வாழ்ந்ததால் இறைவனின் நிலையான அமைதியை உணர்ந்தார்.

அவரது வாழ்வில் செபித்த அமைதியின் செபத்தை பாடலாக மாற்றி மக்கள் செபித்து வருகிறார்கள். அந்தப் பாடல் வரிகள் பின்வருமாறு,

“அமைதியின் தூதனாய், என்னையே மாற்றுமே.

அன்பனே இறைவனே, என்னிலே வாருமே,

பகைமை உள்ள இடத்தில், பாசத்தை வளர்க்கவும்,

வேதனை நிறைந்த மனதில் மன்னிப்பு வழங்கவும்,

கலக்கம் அடையும் வாழ்வில் நம்பிக்கை ஊட்டவும்,

தளர்ச்சி ஓங்கும் போது மனத்திடம் தளைக்கவும்,

இருளே சூழும் வேளை ஒளியை ஏற்றவும்,

துயரம் வாட்டும் நேரம் உதயம் காணவும்”

இந்தப் பாடலில் இருந்து அறிந்து கொள்வது என்னவெனில், அமைதி என்பது பெறுவதில் மட்டும் அல்ல, கொடுப்பதில் உருவாகிறது. அன்பையும், மன்னிப்பையும் பிறருக்கு நாம் கொடுக்கிறபோது அமைதியை பெற முடியும். நம்பிக்கையற்று, மனம் உடைந்து இருக்கிறவர்கள் வாழ்வில் நாம் நம்பிக்கை கொடுக்கிறபோது நிலையான அமைதியை நம்மால் உணரமுடியும். அமைதியின் தூதர்களாய் மாறுகிறபோது நமக்கு அமைதி கிடைக்கிறது. போர் நிறைந்த, அமைதியற்ற இந்த உலகச்சூழலில் அமைதியின் கருவிகளாக மாறுகிற அருளை இறைவனிடம் கேட்போம்.

அவற்றை அடுத்தவர் அமைதியை கெடுக்கிற செயல்களை செய்தோமானால் நினைத்து மனம் வருந்துவோம். அந்த மனிதர்களிடம் மன்னிப்பு கேட்டு, அமைதியை விதைப்பவர்களாக மாறுவோம்.

“அமைதியை ஏற்படுத்துவோர் பேறு பெற்றோர், ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என்று அழைக்கப்படுவர்” (மத்தேயு 5:9) என்று இறைவார்த்தை கூறுகிறது.

இயேசு விவிலியத்தில் பல இடங்களில் அமைதியை அளித்தவராக காணப்படுகிறார். உயிர்ப்புக்கு பிறகு சீடர்களை சந்தித்த எல்லா சூழல்களிலும் "உங்களுக்கு அமைதி உரித்தாகுக” என்று தொடர்ந்து சொல்லி வந்தார். (யோவான் 20:19)

இயேசு சீடர்களை தேர்ந்தெடுத்து நற்செய்தி பணிக்கு அனுப்புகிறபோது அவர்களிடம், “நீங்கள் எந்த வீட்டிற்குச் சென்றாலும் 'அமைதி உரித்தாகுக' என்று முதலில் சொல்லுங்கள்” என்கிறார்.

இவ்வாறு அமைதியை தன் வாழ்வாலும் வார்த்தையாலும் அறிவித்தவர் இயேசு. அவரை முன்மாதிரியாக கொண்டு அமைதியின் கருவிகளாக மாற நாம் முயற்சி செய்வோம். அமைதியை பிறருக்கு கொடுக்கிறபோது நமது வாழ்வும் அமைதியால் நிறைவு பெறும்.

-அ. பொன்னையா ஞானபிரகாசம்

1 More update

Next Story