ஆண்டாளை ‘கோதை’ என்று அழைப்பது ஏன்..?

பெரியாழ்வாரின் திருமகளாய் அவதரித்த ஆண்டாள், அரங்கனையே மணந்து கொண்டபடியால், பெரியாழ்வாருக்கு அரங்கனின் மாமனார் என்னும் ஸ்தானம் கிட்டியது.
ஆண்டாளை ‘கோதை’ என அழைப்பது ஏன்..?
ஆண்டாள்
Published on

பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாரான ஆண்டாள் நாச்சியாருக்கு ‘கோதை’ என்ற பெயர் ஏற்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன.

கோதை என்றால் தமிழில் பூ மாலை என்று பொருள். இறைவனுக்குப் பூமாலைகளைச் சுமந்து சுமந்து பழகிய பெரியாழ்வாரின் திருக்கரங்களிலே, அவர் கண்டெடுத்த பெண் குழந்தையும் ஒரு பூமாலை போலவே தோன்றினாளாம். அதனால் கோதை என்று பெயர் சூட்டியதாகச் சொல்வார்கள்.

கோதா என்ற வடமொழிப் பெயருக்குப் பலவிதமான விளக்கங்கள் உள்ளன. தா என்றால் தருபவள். கோ என்றால் நல்வார்த்தை என்று பொருள். நல்வார்த்தைகளை உடைய பாசுரங்களை வழங்கியபடியால் கோதா. கோ என்ற சொல்லுக்கு ஞானம் என்ற பொருளும் இருப்பதால், தனது பாசுரங்களாலே உயர்ந்த ஞானத்தை நமக்கு அருள்வதால் கோதா என்றும் சொல்லலாம்.

கோ என்றால் மங்களம் என்றும் பொருளுண்டு. எனவே மங்களங்களை அருள்பவள் கோதா. ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்து அதற்கும் மங்களம் தந்தாள். இதை வேதாந்த தேசிகன் கோதா ஸ்துதியில் அழகாகத் தெரிவிக்கிறார்.

அரங்கனின் அருட்பார்வை

அரங்கன் தென்திசை நோக்கிப் பள்ளி கொள்வது இலங்கையிலுள்ள விபீஷணனுக்கு அருள்புரிவதற்காக மட்டுமில்லை, ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரும் அதே தென்திசையில் இருப்பதால், அந்தத் தென்திசைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஸ்ரீவில்லிபுத்தூரை நோக்கி அரங்கன் சயனித்திருப்பதாக இந்த ஸ்லோகத்தில் தேசிகன் தெரிவிக்கிறார்.

இவ்வாறு தென்திசை, செவ்வாய்க்கிழமை, பூர நட்சத்திரம், ஆடி மாதம் என அனைத்துக்கும் மங்களத்தை அருளியபடியால் அவள் கோதா. கோ என்றால் பூமி. தா என்று பிளந்தவள். பூமியைப் பிளந்து கொண்டு தோன்றியபடியால் கோதா என்றும் சொல்வதுண்டு.

பெரியாழ்வாரின் திருமகள்

“வேயர்புகழ் வில்லிபுத்தூர் ஆடிப் பூரம்

மேன்மேலும் மிக விளங்க விட்டுசித்தன்

தூய திருமகளாய் வந்து அரங்கனாற்குத்

துழாய்மாலை முடிசூடிக் கொடுத்த மாதே!

நேயமுடன் திருப்பாவை பாட்டு ஆறைந்தும்

நீயுரைத்த தையொரு திங்கள் பாமாலை

ஆயபுகழ் நூறுடன் நாற்பத்து மூன்றும்

அன்புடனே அடியேனுக்கு அருள்செய் நீயே!”

என்று தேசிகன் பாடியபடி, பெரியாழ்வாரின் திருமகளாய் அவதரித்த ஆண்டாள், அரங்கனையே மணந்து கொண்டபடியால், பெரியாழ்வாருக்கு அரங்கனின் மாமனார் என்னும் ஸ்தானம் கிட்டியது. இப்படிப் பெரியாழ்வாரின் பெருமையை உலகுக்கு உணர்த்துதல் ஆண்டாளின் அவதார நோக்கமாகும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com