துக்க தினத்தை புனித வெள்ளி என்று கூறுவது ஏன்?

இயேசு கிறிஸ்து உலக மக்களின் நன்மையை பெரிதாகக் கருதியதால்தான் மக்கள் மனதில் நிறைந்திருக்கிறார்.
இயேசுநாதர்
இயேசுநாதர்
Published on

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதையும், அவரது மரணத்தையும் நினைவுகூரும் நாள் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளை ஆங்கிலத்தில் Good Friday என்பார்கள். இதை நல்ல வெள்ளி என்றும் கூறுவதுண்டு. உண்மையில் இந்த நாளில் இயேசு கிறிஸ்து தன் உயிரைத் துறந்தார். ஒருவர் உயிர்விட்ட நாளை எப்படி நல்ல நாள் எனக் கூற முடியும்? என்று பலரும் கேட்பதுண்டு.

சாதாரண மனிதனுக்குத்தான் இந்த விதிமுறை எல்லாம் பொருந்தும். ஆனால் இயேசு கிறிஸ்துவோ தேவனின் மைந்தர். இந்த உலகம் உய்ய வேண்டும், மக்களை பாவங்களிலிருந்து மீட்க வேண்டும், நானே மீட்பர் என்று அறைகூவல் விடுத்து, அனைவரின் பாவங்களையும் தன் மீது ஏற்றுக் கொண்டார். ஆக, உலகத்தின் நன்மைக்காக, தேவ மகன் உயிர் விட்ட நாள் என்பதால், அது நல்ல நாள் ஆகிறது.

ஆனாலும், இயேசு கிறிஸ்துவின் மரணம் அனைவரையும் பாதித்தது. அதன் காரணமாக அனைவரும் நோன்பு நோற்கின்றனர். அவர் உயிர்த்தெழுந்து வரும் வரை சோகமாகவே இருக்கின்றனர்.

பூமியில் பிறந்தவர்கள் பலரும் தங்கள் சுயநலத்தையே பெரிதென கருதுகிறார்கள். ஆனால், இயேசு கிறிஸ்து உலக மக்களின் நன்மையை பெரிதாகக் கருதினார். அதனால் தான் மக்கள் மனதில் அன்றும், இன்றும் நிறைந்து இருக்கிறார், என்றும் நிறைந்திருப்பார்.

அவ்வகையில் இந்த ஆண்டு இன்று புனித வெள்ளி கடைப்பிடிக்கப்படுகிறது. புனித வெள்ளியை முன்னிட்டு, தேவாலயங்களில் அமைதியான முறையில் ஆராதனைகள் நடக்கின்றன. இதுதவிர சிலுவைப்பாதை ஜெபவழிபாடும் நடைபெறுகிறது. நாளை மறுதினம் ஈஸ்டர் பண்டிகை (உயிர்ப்பு பெருவிழா) கொண்டாடப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com