

கடையம்,
தோரணமலை முருகன் கோவிலில் கடைசி வெள்ளி மற்றும் ஆடிப்பூரத்தையொட்டி பெண்கள் மணி அடித்து வேல்பூஜை செய்தனர்.
தென்காசி மாவட்டம் தோரணமலை முருகன் கோவிலில் தமிழ்மாத கடைசி வெள்ளி அன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் வருணகலச பூஜை நடைபெறும். இந்த மாதம் கடைசி வெள்ளி மற்றும் ஆடிப்பூரமும் இணைந்து வந்ததால் பூஜையை சிறப்பாக நடத்தினார்கள். ஆடிப்பூரம் என்பதால் இந்த பூஜையில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருந்தது.
அதிகாலையில் அடிவார வல்லப விநாயகருக்கும், மலைமீதுள்ள முருகப்பெருமானுக்கும் அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. மலையில் உள்ள பத்திரகாளி அம்மனுக்கும், அடிவாரத்தில் உள்ள கன்னிமாரம்மனுக்கும் பூஜை நடந்தது. இதனை அடுத்து முருக பக்தர்கள் 21 பேர் மலைமீதுள்ள சுனையில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்தனர். உற்சவர்கள் முருகன்-வள்ளி, தெய்வானைக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. அதன்பின் மூலவர்கள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மேடையில் எழுந்தருளார்கள்.
மேடையை சுற்றி வேல்கள் வரிசையாக வைக்கப்பட்டன. அதேபோல் மணிகளும் கட்டி தொங்கவிடப்பட்டு இருந்தன. உற்சவர்களுக்கு பூஜை நடந்தபோது போது பெண்கள் மணிகளை அடித்தபடி வேல்களுக்கும் பூஜை செய்தனர். விவசாயம் செழிக்க வருணகலச பூஜையும் நடந்தது.
கடையம் பரம வித்யாலயா குருகுலம் மாணவர்கள் 16 பேர் வட இந்திய ஆசான் தலைமையில் தோரணமலைக்கு வந்திருந்தனர். அவர்கள் குழுவாக வேத மந்திரம் சொன்னார்கள். அதன்பின் குருகுல மாணவர்களுக்கு கராத்தே, யோகாக ஆசிரியர் வேல்முருகன் யோகா கற்றுக்கொடுத்தார்.
தோரணமலையில் அமைக்கப்பட்டு உள்ள நூலகத்தில் 5,576 புத்தகங்கள் உள்ளன. மேலும் தினசரி பத்திரிகைகளும் உள்ளன. கோவிலுக்கு வந்தவர்கள் பலர் நூலகத்திற்கு சென்று படித்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் காலையில் சிற்றுண்டியும் மதியம் சாப்பாடும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் செய்திருந்தார்.